![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Sudhakar: 80களின் பிரபல நடிகர் சுதாகர் உடல்நிலை எப்படி இருக்கு? வெளியான விளக்கம்!
80களில் நடிகை ராதிகாவின் ஹிட் ஜோடியாக விளங்கிய சுதாகர்(Sudhakar) அவருடன் மட்டும் 11 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது மூன்று தமிழ் திரைப்படங்கள் 100 நாள்களைக் கடந்து சூப்பர் ஹிட் அடித்து கலக்கின.
![Sudhakar: 80களின் பிரபல நடிகர் சுதாகர் உடல்நிலை எப்படி இருக்கு? வெளியான விளக்கம்! Actor Sudhakar addresses rumours on his health and death news Sudhakar: 80களின் பிரபல நடிகர் சுதாகர் உடல்நிலை எப்படி இருக்கு? வெளியான விளக்கம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/29/e1dc0f25e3d6187601715fcf02bcd24a1685361714954224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் சுதாகர்(Sudhakar) தன் உடல்நிலை குறித்துப் பரவிய தகவல்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
80களில் தமிழ், தெலுங்கு சினிமாக்களில் பிரபல நடிகர்களுள் ஒருவராக விளங்கியவர் நடிகர் சுதாகர். இயக்குநர் பாரதிராஜாவால் தமிழ் சினிமாவில் 1978ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் படம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் சுதாகர். நடிகை ராதிகாவுடன் அறிமுக நடிகராக தன் நடிப்புப் பயணத்தைத் தொடங்கிய சுதாகருக்கு முதல் படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
தொடர்ந்து மனிதரில் இத்தனை நிறங்களா, நிறம் மாறாத பூக்கள், சுவரில்லாத சித்திரங்கள், கல்லுக்குள் ஈரம் என ஒரு சில ஆண்டுகளுக்குள் ஒரு டஜன் படங்கள் நடித்து அன்றைய காலக்கட்ட நடிகர்களின் மனங்களை ஈர்த்தார்.
அதன் பின் 1980ஆம் ஆண்டு பவித்ர ப்ரேமா எனும் திரைப்படம் மூலம் தன் நடிப்புப் பயணத்தைத் தொடங்கிய நடிகர் சுதாகர், தொடர்ந்து டோலிவுட் சினிமாவில் முழுமூச்சாக கவனம் செலுத்தத் தொடங்கினார்.
தெலுங்கு சினிமாவில் கதாநாயகன், நகைச்சுவை நடிகர் எனக் கலக்கி வந்த சுதாகர், தொடர்ந்து குறிப்பிடத்தக்க நடிகர்களுள் ஒருவராக வலம் வருகிறார்.
இந்நிலையில், தற்போது 64 வயதாகும் நடிகர் சுதாகரின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், சுதாகர் உயிரிழந்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவின. தெலுங்கு, தமிழ், இந்தி என 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சுதாகரின் உடல்நிலை பற்றி இவ்வாறான தகவல்கள் பரவிய நிலையில், பலரும் அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு விசார்த்து வந்துள்ளனர்.
டோலிவுட் சினிமா உலகில் இந்தத் தகவல் பரபரப்பைக் கிளப்பி வந்த நிலையில் தன் உடல்நிலை குறித்து சுதாகர் முன்னதாக விளக்கமளித்து வீடியோ பகிர்ந்துள்ளார். "அனைவருக்கும் வணக்கம், என்னைப் பற்றி நீங்கள் அனைவரும் படிக்கும் தகவல் தவறானது. வதந்திகளை நம்பி பகிராதீர்கள், நான் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவும் நலமுடனும் இருக்கிறேன்” எனப் பேசியுள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்தவரான சுதாகர், தனது குரல் மாடுலேஷனால் தெலுங்கு சினிமா ரசிகர்களை ஈர்த்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி ரசிகர்களைப் பெற்றவர் ஆவார்.
தமிழ் சினிமா ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தவர் சுதாகர். “கோயில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ”, “மாஞ்சோலைக் கிளி தானோ” எனும் பாடலைக் கேட்டால் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சுதாகரே சட்டென்று நினைவுக்கு வருவார்.
80களின் தொடக்கத்தில் நடிகை ராதிகாவின் ஹிட் ஜோடியாக விளங்கிய சுதாகர் அவருடன் மட்டும் 11 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது மூன்று தமிழ் திரைப்படங்கள் 100 நாள்களைக் கடந்து சூப்பர் ஹிட் அடித்து கலக்கின.
90களின் பிரபல ஹாலிவுட் படமான Baby’s day out படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட ‘சிசிந்த்ரி’ - தமிழில் ‘சுட்டிக்குழந்தை’ படத்தில் நடித்த சுதாகர் தன் குரல்மொழி மற்றும் காமெடியால் ரசிகர்களைக் கவர்ந்து இரு மொழிகளிலும் சிரிக்க வைத்தார்.
இந்நிலையில் சுதாகர் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு இவ்வாறாக வீடியோ பகிர்ந்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)