ATM: ரூ.500 கேட்டால் ரூ.2500 வருது.. அள்ளிக்கொடுத்த ஏடிஎம்! கூடிய கூட்டம்! நடந்த தவறு இதுதான்!!
ஏடிஎம் கார்டைப் பயன்படுத்துவது குறித்து சமீபத்தில் தெளிவான அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு.
ஏடிஎம்:
பணப் பரிவர்த்தனைக்கு மிகவும் முக்கியமான சேவையாக மாறிவிட்டது ஏடிஎம். ஒருநாள் ஏடிஎம்கள் முடங்கினாலே மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும் நிலைமைதான் தற்போது. இப்படி நமக்கான தேவைக்கு நாம் குறிப்பிடும் பணத்தை வழங்கும் ஏடிஎம், எக்ஸ்ட்ராவாக கொடுத்தால் எப்படி இருக்கும்? அப்படியான ஒரு இன்ப அதிர்ச்சியை நாக்பூர் ஏடிஎம் கொடுத்துள்ளது.
நாக்பூரில் உள்ள ஒரு ஏடிஎம்மில் ஒருவர் ஏடிஎம் கார்டை சொருகி ரூ.500ஐ அழுத்தியுள்ளார். ஒரு நோட்டு வரும் என எதிர்பார்த்து காத்திருந்த அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது ஏடிஎம். ரூ.500 நோட்டே 5 வந்துள்ளது. அதாவது ரூ.500 பதிவிட்ட நபருக்கு ரூ.2500 கொடுத்துள்ளது ஏடிஎம். ஆஹா என சந்தோஷமடைந்த அவர், மீண்டும் ரூ.500ஐ பதிவிட்டுள்ளார்.மறுபடி ரூ.2500 கொடுத்துள்ளது ஏடிஎம். இந்த தகவல் அந்தப்பக்கம் முழுவதும் காட்டுத்தீயாய் பரவ ரூ.500 போட்டால் ரூ.2500 வருகிறது என கூட்டம் கூடியது.
கூட்டம்
ஓவர் கூட்டத்தைப் பார்த்து ஷாக் ஆன வங்கி ஊழியர் ஒருவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கூட்டத்தைக் கலைத்துவிட்டு ஏடிஎம்மை இழுத்து மூடினர். இது தொடர்பாக அந்த ஏடிஎம்க்கு தொடர்புடைய வங்கிக்கும் புகாரளிக்கப்பட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட ஏடிஎம்மை ஆய்வு செய்த வங்கி ஊழியர்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த தவறு நடந்துள்ளதாக தெரிவித்தனர்.
100 ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்வதற்காக ஏடிஎம் ட்ரேயில் ரூ.500 ரூபாய் நோட்டுகள் தவறாக வைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த கவனக்குறைவுதான் இந்த சிக்கலுக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக யார் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.
இறந்தபின் ஏடிஎம்..
ஏடிஎம் தொடர்பாக அரசும் பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை தொடர்ந்து கொடுத்து வருகிறது. ஒருவர் இறந்தபின் அவரது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்துவது குறித்து சமீபத்தில் தெளிவான அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு. அதில்,ஒருவர் இறந்த பின் அவரது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி, பின் நம்பர் செலுத்தி, பணம் எடுத்துக் கொள்வது சட்டத்திற்குப் புறம்பானது. ஒருவர் இறந்த பின், அவரது இறப்பு குறித்து வங்கிக்குத் தகவல் தெரிவிக்காமல், அவரது குழந்தைகள் அவரது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி, பணம் எடுத்துக் கொண்டு, பிறகு வங்கியிடம் அவரது இறப்பு குறித்து தகவலைத் தந்தாலும் அது குற்றமாகக் கருதப்படும். மேலும், சட்டப்பூர்வமான வாரிசு யார் என்ற மோதலுக்கும் இது வித்திட வாய்ப்புள்ளதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு இறந்தவரின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி, பணம் எடுப்பது என்பது வங்கியையும், இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளையும் ஏமாற்றுவதற்குச் சமமாகக் கருதப்படும். இப்படியான நிலை ஏற்படுமானால், இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்தால், அது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.