Thug Life OTT: வசூலில் மரண அடி வாங்கி வாங்கிய 'தக் லைஃப்'... ஓடிடி ரிலீஸில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் வெளியாகி படு தோல்வியை சந்தித்துள்ள, 'தக் லைஃப்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னணி நடிகர்கள், மற்றும் இயக்குனர்களின் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில், 'நாயகன்' திரைப்படம் வெளியாகி 38 ஆண்டுகள் ஆகும் நிலையில், மீண்டும் கமல் மற்றும் மணிரத்னம் காம்போவில் உருவான திரைப்படம் தான், 'தக் லைஃப்'. மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' படத்தின் வெற்றிக்கு பின்னர் இந்த படத்தை இயக்கி இருந்தார். அதே போல் கடந்த ஆண்டு 'இந்தியன் 2' திரைப்படம் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய தோல்விப்படமாக இருந்த நிலையில், எப்படியும் 'தக் லைஃப்' திரைப்படம் கமல்ஹாசனுக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
'நாயகன்' பட டச்சுடன், கேங் ஸ்டார் கதைக்களத்தில், கமல் - சிம்பு என இரு ஸ்டார் நடிகர்கள் நடிப்பில் வெளியான 'தக் லைஃப்' படம் தாறு மாறாக இருக்கும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில்... முதல் நாளே கலவையான விமர்சனங்களை பெற தொடங்கியது. பல ரசிகர்கள் இது உண்மையிலே மணிரத்னத்தின் படம் தானா? என கமெண்ட் செய்து வந்ததோடு... இந்திரா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை த்ரிஷாவை விமர்சிக்கவும் செய்தனர்

ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த இந்த படத்தில் BGM சுமார் என்றாலும்... ரகுமானின் பாடல்கள் படத்திற்கு உயிர் கொடுத்தது. அதே நேரம் ஜிங்குச்சான் பாடலை தவிர எந்த ஒரு பாடலும் படத்தில் இடம்பெறாதது அதிர்ச்சியின் உச்சம்.
300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தக் லைஃப் திரைப்படம், முதல் நாளில்... ரூ.46 கோடி வசூல் செய்த நிலையில், 5 நாட்களில் 75 முதல் 80 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வாரத்தில் ரூ.100 கோடியை இப்படம் எட்டினாலும், தோல்வி படமாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான், தக் லைஃப் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸில் திடீர் என சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 'தக் லைஃப்' திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை, மிகப்பெரிய தொகைக்கு நெட்பிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில்... படக்குழுவினர் படத்தை 4 வாரங்களில் ரிலீஸ் செய்தால் படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் என கோரிக்கை வைத்து, 8 வாரத்திற்கு பின்னரே படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என கூறினார்களாம்.

ஆனால் இப்போது 'தக் லைஃப்' திரைப்படம் படு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. பெரும்பாலான திரையரங்குகள் ஈ ஓட்டும் நிலையில் இருப்பதால்... 8 வாரங்களுக்கு முன்னரே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
'தக் லைஃப்' திரைப்படத்தில், கமல்ஹாசன் மற்றும் சிம்புவுடன் இணைந்து... அபிராமி, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், நாசர், ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜூன் 5-ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த படத்தை, ராஜ் கமல் ஃபிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ், மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது . அதே போல் கூடிய விரைவில் ஓடிடி ரிலீஸ் தேதியை எதிர்பார்க்கலாம்.





















