Trump-Musk Rift Ends?: ட்ரம்ப் - மஸ்க் மோதல் முடிவுக்கு வந்ததா.? சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம் - நடந்தது என்ன.?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்த சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை நீக்கியுள்ளார் எலான் மஸ்க். இதனால், இருவருக்கும் இடையே இருந்த மோதல் முடிவுக்கு வந்ததா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடந்தது என்ன தெரியுமா.?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே உச்சகட்ட மோதல் இருந்துவரும் நிலையில், ட்ரம்ப்பின் பெயர் எப்ஸ்டீன் ஆவணங்களில் இடம்பெற்றிருப்பதாக போட்ட பதிவை மஸ்க் நீக்கியுள்ளார். இதனால், அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த மோதல் முடிவுக்கு வந்துவிட்டதாக என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ட்ரம்ப் குறித்த பதிவை நீக்கிய மஸ்க்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பிற்கு பெரும் உதவிகளை செய்து, அவர் அதிபராவதற்கு பெரும் பங்காற்றினார் எலான் மஸ்க். இதனால் ட்ரம்ப் வெற்றி பெற்ற நிலையில், அதிபராக பொறுபேற்ற அவர், அரசு செயல்திறன் துறை(DOGE) என்ற ஒன்றை உருவாக்கி, அதற்கு தலைவராக எலான் மஸ்க்கை நியமித்தார்.
அதன் பின் அதிரடியாக செயல்பட்ட மஸ்க், பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அதற்கு ஒருபுறம் பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. அது ஒருபுறமிருக்க, அரசின் மீதே அதிக கவனம் செலுத்தியதால், மஸ்க்கின் நிறுவனங்கள் சிக்கலை சந்தித்தன. அவரது டெஸ்லா நிறுவனம் சரிவை நோக்கி சென்றுகொண்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியான மஸ்க், தனது பெரும்பாலான நேரத்தையும், கவனத்தையும் தனது நிறுவனங்கள் மீது திருப்பப் போவதாக அறிவித்தார். இதையடுத்து, ட்ரம்ப்பிற்கும் அவருக்கும் இடையே சிறிய மனவருத்தம் ஏற்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் அரசு செயல்திறன் துறையிலிருந்து விலகினார் மஸ்க்.
அதைத் தொடர்ந்து, மஸ்க் - ட்ரம்ப் இடையே மோதல் போக்கு அதிகரித்து, சமூக வலைதளத்தில் மாறி மாறி பதிவுகளை போட்டு வருகின்றனர். இந்த சூழலில், ட்ரம்ப்பிற்கு ஆப்பு வைக்கும் அளவிற்கு ஒரு பதிவை போட்டார் எலான் மஸ்க்.
அதில், உண்மையிலேயே பெரிய குண்டு ஒன்றை போட வேண்டிய நேரமிது என்று குறிப்பிட்டு, எப்ஸ்டீன் கோப்புகளில் ட்ரம்ப்பின் பெயர் உள்ளது என குறிப்பிட்டிருந்தார். அந்த கோப்புகள் பொதுவெளியில் வராததற்கு அது தான் உண்மையான காரணம் என்றும் மஸ்க் தெரிவித்திருந்தார். அதோடு, ட்ரம்ப்பை நக்கலடிக்கும் விதமாக, இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையட்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
அந்த பதிவின் கமெண்ட்டில், இந்த பதிவை குறித்து வைத்துக் கொள்ளுங்கள், உண்மை வெளியே வரும் என்றும் மஸ்க்கே பதிவிட்டிருந்தார். மேலும், ட்ரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக ஜே.டி. வான்ஸ் பதவியேற்க வேண்டும் என்று வந்த ஒரு கமெண்ட்டை மேற்கோள் காட்டி, ஆமாம் என கூறியிருந்தார் மஸ்க். அதைத் தொடர்ந்து, மஸ்க்கின் பதிவு மிகப் பெரும் பேசுபொருளானது.
எப்ஸ்டீன் யார் என்று உலக அளவில் மக்கள் தேட ஆரம்பித்தனர். இதனால் கோபமடைந்த ட்ரம்ப், மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அரசு ஒப்பந்தங்களை ரத்து செய்துவிடுவேன் என மிரட்டினார். இப்படிப்பட்ட சூழலில், திடீரென ட்ரம்ப் எப்ஸ்டீன் ஆவணங்களில் உள்ளதாக தான் போட்ட பதிவை நீக்கியுள்ளார் எலான் மஸ்க். இதனால், இருவருக்கும் இடையே இருந்த மோதல் முடிவுக்கு வந்துவிட்டதாக என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்ததாக ட்ரம்ப் போடும் பதிவை வைத்தே, அதற்கான விடை தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம்.





















