Aadi Perukku 2024 | தொட்டது துலங்கும் ஆடிப்பெருக்கு..காவிரி கரையில் குவியும் மக்கள்..
தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தஞ்சாவூர் மற்றும் திருவையாறு உட்பட பல இடங்களில் ஆடிப்பெருக்கு விழாவில் காவிரி படித்துறையில், பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி, தஞ்சாவூர் பெரிய கோயில் அருகில் உள்ள கல்லணை கால்வாய்
மற்றும் திருவையாறு காவிரி கரை படித்துறையில் புனித நீராடிய புதுமண தம்பதிகள் தங்களது திருமண மாலையை காவிரி ஆற்றில் விட்டு, பெண்கள் ஒருவருக்கு ஒருவர் கழுத்தில் மஞ்சள் கயிறு அணிவித்து கொண்டு காவிரி தாயை வழிபட்டு வருகின்றனர்.
ஆடிப்பெருக்கு விழா தமிழர்களின் பாரம்பரிய விழாவாக மட்டுமல்லாமல் காவிரி தாயை வணங்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் மட்டும் வழிபடும் விழாவான ஆடிப்பெருக்கு விழா டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகளில் கொண்டாடப்படுகிறது.
மூத்த பெண்களிடம் இளம் பெண்கள் ஆசிர்வாதம் பெற்றனர். புதுமண தம்பதிகள் தாலியை புதிய மஞ்சள் கயிற்றில் கோர்த்து அணிந்து கொண்டு, திருமண மாலையை காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனர்
காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பாதுகாப்புக்கு ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தீயணைப்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்