Trump & Musk Interview: இவர அவர் புகழ்றதும்.. அவர இவர் புகழ்றதும்.. என்னவோ போங்க.!! ட்ரம்ப், மஸ்க் என்ன சொன்னார்கள்.?
Trump & Musk Interview: அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ட்ரம்ப் மற்றும் மஸ்க், ஒருவரை ஒருவர் புழந்து தள்ளியுள்ளனர். அவர்கள் அப்படி என்ன சொன்னார்கள்.? பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது அரசில் முக்கிய அங்கம் வகிக்கும் எலான் மஸ்க்குடன் இணைந்து, அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், ஒருவரை ஒருவர் புகழ்ந்து தள்ளியுள்ளனர். அவர்கள் அப்படி என்னதான் சொன்னார்கள் என்று இப்போது தெரிந்துகொள்ளலாம்.
“இவரை விட ஒரு புத்திசாலியை கண்டுபிடிக்க முடியவில்லை”
டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் இணைந்து அளித்த பேட்டியின்போது, அரசாங்க செயல்திறன் துறைக்கு இவரை விட புத்திசாலியான ஒரு நபரை என்னால் கண்டுபிடித்திருக்க முடியாது என, எலான் மஸ்க்கிற்கு புகழாரம் சூட்டினார் ட்ரம்ப்.
மேலும், நாட்டின் முன்னேற்றத்திற்கு தன்னுடன் இணைந்து பணியாற்ற ஒரு புத்திசாலியை தேடியதாகவும்... அது இவர்தான்.. இவர் அனைத்தையும் செய்து முடிப்பார் என மஸ்க் குறித்து கூறியுள்ளார் ட்ரம்ப். அதோடு, அவரை விட ஒரு புத்திசாலியை தேடி முயன்றதாகவும், ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அதனால் இவரையே இணைத்துக்கொண்டதாகவும் கூறினார் ட்ரம்ப். மேலும், மஸ்க் ஒரு சிறந்த சிந்தனையாளர் என்றும், அதீத கற்பனைத்திறன் உடையவர் என்றும், அதே சமயத்தில் நாட்டின் மீது அக்கறை கொண்டவர் என்றும் பாராட்டினார்.
ஸ்பேஸ் எக்ஸ் மூலம் மஸ்க் செய்துவரும் பணிகளை வெகுவாக பாராட்டிய ட்ரம்ப், அந்நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் திட்டம், பேரழிவு பாதித்த பகுதிகளில் முக்கிய தகவல் தொடர்பை வழங்கியதாக குறிப்பிட்டார். அதிலும் முக்கியமாக, வடக்கு கரோலினா பகுதியில் ஏற்பட்ட பேரழிவை நினைவுகூர்ந்த அவர், அந்த நேரத்தில், தான் கேட்டுக்கொண்டதற்காக, தகவல் தொடர்பிற்கு ஆயிரக்கணக்கான யூனிட்டுகளை மஸ்க் இறக்கியதாவும், அதன் மூலம் ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
இதோடு, தன்னையும், மஸ்க்கையும் பிரிக்க ஊடகங்கள் முயன்றதாக ட்ரம்ப் குற்றம்சாட்டினார். அதிபரின் அதிகாரங்களை ட்ரம்ப் மஸ்க்கிடம் கொடுத்துவிட்டார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாகவும், அதை பார்த்துவிட்டு உடனடியாக மஸ்க் தன்னை தொடர்புகொண்டு, அவர்கள் நம்மை பிரிக்க முயல்கிறார்கள், அதற்காக மிகவும் மோசமாக செய்தி வெளியிடுகிறார்கள் என்று கூறியதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க மக்களுக்கு ட்ரம்ப் ஒரு பெட்டர் டீல் - மஸ்க்
ட்ரம்ப்பின் புகழாரத்தை ஏற்றுக்கொண்ட எலான் மஸ்க், என்னை இணைத்துக்கொண்டதற்கு நன்றி என ட்ரம்பிடம் தெரிவித்தார். தொடர்ந்து, ட்ரம்ப் குறித்து பேசிய எலான் மஸ்க், ட்ரம்ப்பின் தலைமையை பாராட்டினார். அவரது 2024 அதிபர் தேர்தல் வெற்றியை, அமெரிக்காவின் அமைப்பை சரி செய்ய ஒரு வாய்ப்பு என்று கூறினார்.
அதிபர் ட்ரம்ப்பின் திறமையும், மக்கள் மீதான அவரது அக்கறையும், சிறந்த திட்டங்களை கொடுக்கும் என்றும், அவருக்கு வெற்றியை கொடுத்த அமெரிக்க மக்களுக்கு ட்ரம்ப் ஒரு Better Deal என்றும் தெரிவித்தார்.
இப்படி, ட்ரம்ப்பும், மஸ்க்கும் ஒருவருக்கொருவர் மாறி மாறி புகழாரம் சூட்டி பேட்டியளித்தது பெரிய விஷயமல்ல, மக்களுக்கு நல்லது நடந்தால் சரி.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

