"தோப்பு கொஞ்சம் பொறுங்க.. அதான் நான் பேசுறேன்ல" முன்னாள் அமைச்சரிடம் எகிறிய இந்நாள் அமைச்சர்!
ஈரோட்டில் நிருபர்களுக்கு பதில் அளிக்க முயன்றி தோப்பு வெங்கடாச்சலத்தை அமைச்சர் முத்துசாமி தடுத்து நிறுத்தி கண்டித்தது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் வீட்டுவசதி மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் முத்துசாமி. இவர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஈரோடு மாவட்டத்தில் அதிமுக-வின் முக்கிய புள்ளியாக இருந்தவர் தோப்பு வெங்கடாச்சலம். இவர் கடந்த 2021ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இருந்து விலகி திமுக-வில் இணைந்தார்.
பனிப்போர்:
ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே அமைச்சர் முத்துசாமி வெள்ளக்கோயில் சாமிநாதன் திமுக-விற்கு மிகப்பெரிய பலமாக உள்ளனர். இந்த நிலையில், தோப்பு வெங்கடாச்சலத்தின் வருகை திமுக-விற்கு கூடுதல் பலமாக பார்க்கப்பட்டது. ஆனால், உட்கட்சி ரீதியாக பனிப்போர் நிலவுவதாக தகவல்கள் வெளியாகி வந்தது.
இந்த சூழலில், ஈரோட்டில் நிருபர்களை அமைச்சர் முத்துசாமி சந்தித்தார். அப்போது, முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலமும் உடனிருந்தார். அப்போது, நிருபர்கள் அளித்த கேள்விக்கு அமைச்சர் முத்துசாமி பதில் அளித்துக் கொண்டிருந்தார்.
தோப்பு கொஞ்சம் இருங்க:
அப்போது, அருகில் நின்று கொண்டிருந்த தோப்பு வெங்கடாச்சலம் அவர்களது கேள்விக்கு பதில் அளிக்க முயற்சித்தார். தான் பேசிக் கொண்டிருக்கும்போது தோப்பு வெங்கடாச்சலம் குறுக்கிட்டு பதிலளிக்க முயன்றதால் அமைச்சர் முத்துசாமி கோபம் அடைந்தார். உடனே அவர் தோப்பு வெங்கடாச்சலத்திடம், இருங்க நான் சொல்லிக்கிறேன். நீங்க கொஞ்சம்.. என்கிட்டதானே கேக்குறாங்க. நான் சொல்லிக்குறேன். ஏன் குறுக்கீட்றீங்க? இருங்க தோப்பு நான் சொல்லிட்றேன் என்றார்.
தொண்டர்கள் அதிர்ச்சி:
இதனால், அந்த இடத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே அமைச்சர் முத்துசாமிக்கும், தோப்பு வெங்கடாச்சலத்திற்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், பொதுவெளியில் தோப்பு வெங்கடாச்சலத்திடம் அமைச்சர் முத்துசாமி கோபப்பட்டது தற்போது தொண்டர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் தெற்கு மாவட்டச் செயலாளராக முத்துசாமியும், ஈரோடு மாவட்ட மத்திய மாவட்டச் செயலாளராக தோப்பு வெங்கடாச்சலமும், ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளராக நல்லசிவம் உள்ளனர். தோப்பு வெங்கடாச்சலம் அதிமுக ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உட்கட்சி மோதல்:
ஈரோடு மாவட்டத்தில் தோப்பு வெங்கடாச்சலத்திற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதற்கு நீண்ட காலமாக திமுகவில் பொறுப்பு வகித்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக ஏற்கனவே கருத்துக்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது முத்துசாமி அவரை கண்டிக்கும் விதமாக பொதுவெளியில் பேசியுள்ளார்.
அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், திமுக அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை எதிர்க்கட்சி அளித்து வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் நிகழும் குற்றச்சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபோன்று பல நெருக்கடிகள் இருந்து வரும் நிலையில், தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் உட்கட்சிக்குள் இதுபோன்ற மோதல் நடந்து வருவது திமுக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பல மாவட்டங்களிலும் இதுபோன்று அமைச்சர்கள் மற்றும் மாவட்டச்செயலாளர்கள் சிலருக்கு கருத்து மோதல் இருப்பதாக தகவல் வெளியாகி வரும் சூழலில், இப்போது பொதுவெளியில் பேசிக் கொண்டிருப்பது திமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

