Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?
திருச்செந்தூர் முருகன் கோயிலில் விரைவு தரிசன கட்டணம் 1000 ரூபாய் நிர்ணயம் செய்துள்ளதாக தகவல் வெளியானதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 2024ம் ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா நவம்பர் 2ம் தேதி முதல் நவம்பர் 9ம் தேதி வரை எட்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது. திருச்செந்தூர் கோயிலில் தரிசனம் செய்வதற்கு கட்டணமில்லா வரிசை மற்றும் 100 ரூபாய் கட்டண வரிசை நடைமுறையில் இருக்கிறது. கந்தசஷ்டி விழா நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும், மேலும் பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்கி விரதம் மேற்கொள்வார்கள்.
அதனால் கந்தசஷ்டி விழாவின் போது பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க 1000 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டை கோயில் நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக பக்தர்கள் ஆலோசனை தெரிவிக்கலாம் என கோயில் அறிவிப்பு பலகையில் பேப்பர் ஒட்டப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது. ஆனால், கோவில் தக்கார், இணை கமிஷனர் பெயர் இருந்த இடத்தில், எந்தவித கையெழுத்தும் இல்லை.
விரைவு தரிசன கட்டணத்திற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சாதாரணமாக இருக்கும் கட்டணத்தை விட்டுவிட்டு இப்படி கூடுதல் கட்டணம் வைத்து பக்தர்களை ஏமாற்றுவதாக எதிர்ப்பு தெரிவித்தனர். கோயில் உண்டியல் காணிக்கையை வைத்தும் மக்களுக்கு தேவையான ஏற்பாடுகளை முறையாக செய்யாமல் அதிக கட்டணம் வசூலிப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் கோயில் நிர்வாகம் தரப்பில் இருந்து மறுப்பு வந்துள்ளது. 1,000 ரூபாய் விரைவு தரிசன கட்டணம் அமல்படுத்த, கோவில் நிர்வாகத்தால் எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என கோயில் தக்கார் அருள்முருகன் தெரிவித்துள்ளார்.