ரூ.10 லட்சம் மதிப்பிலான கல்வி சீர்வரிசை, மாட்டு வண்டியில் ஊர்வலம்! மாணவர்கள் உற்சாகம்
செஞ்சியில் மேளதாள முழங்க மாட்டு வண்டியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கல்வி சீர்வரிசை பொருட்களை அரசு பள்ளிகளுக்கு செயல் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.

விழுப்புரம்: செஞ்சியில் மேளதாள முழங்க மாட்டு வண்டியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கல்வி சீர்வரிசை பொருட்களை அரசு பள்ளிகளுக்கு செயல் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.
கல்வி சீர்வரிசை என்பது ஒரு அரசுப் பள்ளிக்கு, அந்தப் பள்ளியின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த, தேவையான பொருட்களை வழங்குவது ஆகும். இந்த சீர்வரிசை, பள்ளி மேலாண்மைக் குழு, கிராம மக்கள் மற்றும் பெற்றோர் போன்றோர் இணைந்து வழங்குகின்றனர்.
ரூ.10 லட்சம் மதிப்பிலான கல்வி சீர்வரிசை
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா மலையரசன் குப்பம், மளவங்தாங்கல், ஆலம்பூண்டி, கெங்கவரம், கணக்கன்குப்பம், அடுக்கம், உள்ளிட்ட கிராமபுறங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு செயல் அறக்கட்டளை நிறுவனர் கார்த்திக் பொன்னுசாமி தனது பிறந்தநாளை முன்னிட்டு கல்வி சீர்வரிசை பொருட்களை வழங்கினார். அதன்படி மலையரசன் குப்பத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கும் விழாவில் கிராம மக்கள் தாம்பூல தட்டு மற்றும் மாட்டு வண்டியில் பள்ளி மாணவர்களுக்கான நோட்புத்தகம், பேனா, பென்சில், மற்றும் விளையாட்டு உபரகரணஙகள் சீர்வரிசையாக கொண்டு வந்தனர். மாட்டு வண்டியில் மேளதாளம் முழங்க ஊர் மக்கள் திரண்டு சீர்வரிசை பொருட்களை பள்ளி கொண்டு வந்து, பள்ளி தலைமை ஆசிரியரிடம் பொருட்களை ஒப்படைத்தனர்.
ஏழை எளியோருக்கு வேட்டி சேலை
மேலும் 10 பள்ளிகளில் சுமார் 2 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்களை செயல் அறக்கட்டளை நிறுவனர் கார்த்திக் பொன்னுசாமி வழங்கினார். மேலும் மாணவ, மாணவியர்களுக்கு அறுசுவை பிரியாணியும் வழங்கப்பட்டது. மேலும் மாற்று திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்கள், ஏழை எளியோருக்கு சேலை, வேட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம், வெட்டிப்பெருமாளகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் ஊர் பொது மக்கள் கல்வி சீர்வரிசையை மேள தாளத்துடன் ஊர்வலமாக கொண்டு சென்றனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கு தேவையான பீரோ, நாற்காலிகள், மின் விசிறிகள் மற்றும் விளக்குகள், பக்கெட், துடைப்பம், சாக்பீஸ் பெட்டிகள், குப்பைக்கூடை, கழிவறை பொருட்கள், கரும்பலகை பெயிண்ட் என ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் சீர் வரிசையாக வழங்கப்பட்டன.






















