Bike Taxi Ban: கர்நாடகாவில் பைக் டாக்சி சேவைக்கு தடை: ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு! நீதிமன்றம் அதிரடி
Bike Taxi Ban Karnataka:கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்சி சேவைகளை நிறுத்தும் ஒற்றை நீதிபதி உத்தரவை இடைக்காலமாக நிறுத்திட முடியாது என, மாநில உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்சி சேவைகளை நிறுத்தும் ஒற்றை நீதிபதி உத்தரவை இடைக்காலமாக நிறுத்திட முடியாது என, மாநில உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஓலா மற்றும் ஊபர் மூலம் பைக் டாக்சி ஓட்டும் லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு
கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி நீதிபதி பி. ஷியாம் பிரசாத், பைக் டாக்சி சேவைகளை ஆறு வாரங்களுக்குள் நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவுக்கு எதிராக ஓலா, உபர் மற்றும் ரேபிடோ ஆகிய நிறுவனங்கள் தடை நீக்க கோரி மேல் முறையீடு மனுக்களை தாக்கல் செய்தன. தனி நீதிபதியின் உத்தரவில் ஆறு வாரங்களுக்குள் நிறுத்த உத்தரவிட்டார். அவர் சொன்ன காலக்கெடு நாளையுடன் முடிவடைய உள்ளதால் , ஜூன் 16 முதல் பைக் டாக்சி சேவைகள் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை ஜூன் 24க்கு ஒத்திவைப்பு:
பொறுப்பு தலைமை நீதிபதி வி. காமேஸ்வர் ராவ் மற்றும் நீதிபதி ஸ்ரீனிவாஸ் ஹரிஷ் குமார் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், மாநில அரசு மற்றும் பிற தரப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, வழக்கை ஜூன் 24, 2025 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடிவு செய்தது. ஜூன் 20க்குள் பதில்களை தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொண்டது.
ரேபிடோ வாதம்
ரேபிடோ நிறுவனம் தனது வாதத்தில், “பைக் டாக்சி சேவைகளை நிறுத்துவதால் கர்நாடகாவில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பயணிகளின் 75% இந்தத் தளங்களைத் தங்கள் முக்கிய வருமானமாக வைத்திருக்கின்றனர். ஒரு மாதத்திற்கு சுமார் ₹35,000 வரை சம்பாதிக்கிறார்கள்,” என தெரிவித்தது.
மேலும், ரேபிடோ மூலம்₹700 கோடிக்கு மேல் கேப்டன்களுக்கு செலுத்தியதாகவும் பெங்களூருவில் மட்டும் ₹100 கோடி GST செலுத்தியதாகவும் கூறியுள்ளது.

சட்டம் தேவை:
இதற்கான விதிகள் விதிக்கும் வரைக்கும் பைக் டாக்சி சேவைகளை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என கோரினர். ஆனால் நீதிமன்றம் அந்த கோரிக்கையை நிராகரித்து, “மாநில அரசு விதிகளை உருவாக்க மறுத்துவிட்ட நிலையில், இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது,” என்று நீதிபதி ராவ் தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் நிலைப்பாடு:
2022-இல் பைக் டாக்ஸிகளை போக்குவரத்து வாகனமாக பதிவு செய்ய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால உத்தரவு அரசு நடவடிக்கையை தடுக்க காரணமாக இருந்தது.ஆனால் 2025 ஏப்ரல் 2 ஆம் தேதி தீர்ப்பில், 2019ல் வெளியான நிபுணர் குழு அறிக்கையை மேற்கோள் காட்டி, அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
அரசுக்கு மூன்று மாதங்களுக்குள் விதிகள் உருவாக்க உத்தரவு வழங்கப்பட்டது.இருப்பினும், போக்குவரத்துத் துறை செயலாளர் என்.வி. பிரசாத், “விதிகள் உருவாக்கப்படவில்லை என்றும், பங்குதாரர்களுடன் எந்தவொரு கலந்தாலோசனையும் நடத்தப்படவில்லை” என்றும் உறுதிப்படுத்தினார்.
போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி, ஜூன் 15க்குள் எந்தவொரு கருத்தையும் வெளிப்படுத்தவில்லை. மேலும், போக்குவரத்து கமிஷனர் யோகேஷ் ஏ.எம்., “பொதுக்கொள்கை இல்லாமல் தனிப்பட்ட இருசக்கர வாகனங்களை பைக் டாக்சியாக சட்டபூர்வமாக பயன்படுத்த முடியாது” என்றும் கூறினார்.





















