Iran Israel Strikes: ”போரை தொடங்கிய இஸ்ரேல்” விடுவதாய் இல்லை என குண்டு மழை பொழிந்த ஈரான் - வீடியோ வைரல்
Iran Israel Strikes: கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு முறை தாக்குதல் நடத்திய இஸ்ரேல் மீது, ஈரான் குண்டு மழை பொழிந்துள்ளது.

Iran Israel Strikes: இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி ஒரு போரை தொடங்கியுள்ளதாக, ஈரானின் உச்சதலைவர் அயதுல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.
பதிலடி தந்த ஈரான்:
ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகள் தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, அந்நாட்டின் மீது இஸ்ரேல் வெள்ளிக்கிழமை அன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் இரண்டு முக்கிய தலைவர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடந்த 24 மணி நேரத்திற்கு முன்பாகவே மீண்டும் மற்றொரு தாக்குதலையும் முன்னெடுத்தது. 200-க்கும் மேற்பட்ட இலக்குகளை வெற்றிகரமாக தாக்கியதாகவும், அதில் ஈரானின் ராணுவ மற்றும் அணு ஆயுத தளங்கள் அடங்கும் என்றும் இஸ்ரேல் தெரிவித்தது. இதற்கு பதிலடி தரும் வகையில் நள்ளிரவில் இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை கொண்டு தாக்குதல்:
ஈரானின் ஃபோர்டோ அணு ஆயுத தளங்களில் இரண்டு வெடி சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலடி தந்தபோது இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் பகுதிகளில் குண்டு வெடிப்பு சத்தங்கள் எழுந்துள்ளன. இதையடுத்து அந்த பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் சைரன் சத்தம் ஒலித்துள்ளது. நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக இஸ்ரேல் தாக்குதலை கருத்தில் கொண்டு, ஈரான் தனது வான் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
As Israel precisely targeted military and nuclear sites, Iran responded with an aggressive attack on civilians in Tel Aviv.
— House Foreign Affairs Committee Majority (@HouseForeignGOP) June 13, 2025
It’s not rocket science to figure out who the good guys and bad guys are here. pic.twitter.com/v8qjcV82Qd
வான்வெளியில் அடித்துக் கொண்ட இஸ்ரேல் - ஈரான்:
இதையடுத்து இன்று காலையில் இருநாடுகளும் ஏவுகணைகளை ஏவி வான்வெளியில் சரமாரியாக தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதன் காரணமாக இரு நாடுகளின் முக்கிய நகரங்களில் வெடிப்பு சத்தம் கேட்டதோடு, வான் தாக்குதலை எச்சரிக்கும் சைரன்களும் தொடர்ந்து ஒலித்து வண்ணம் இருந்தன. இஸ்ரேலிய இராணுவம் அமெரிக்க ஆதரவுடன் பல ஈரானிய ஏவுகணைகளை இடைமறித்ததாக அறிவித்தது, அதே நேரத்தில் ஈரான் இரண்டாவது அலைத் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறியது. இதனால் நிலைமை மோசமடைந்துள்ளதால், இருநாடுகளுக்கு இடையேயான போர் சூழல் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. அதே நேரத்தில் மத்திய கிழக்கில் அமைதி திரும்ப வேண்டும் என பல உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
தலைவர்களின் காட்டமான கருத்துகள்:
தாக்குதல் சம்பவம் தொடர்பாக பேசிய ஈரானின் உச்ச தலைவர் காமெனி, “எங்கள் நாட்டின் மீது தாக்குதல்களை நடத்தி இஸ்ரேல் போரை தொடங்கியுள்ளது” என தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நடவடிக்கை குறித்து பேசிய அந்நாட்டு தலைவர் நேதன்யாகு, “இந்தத் தாக்குதல்கள் ஈரானின் இறையாட்சியின் வீழ்ச்சியைத் தூண்டும் என்று நம்புகிறேன். இந்த மோதல் ஈரான் மக்களுக்கு எதிரானது கிடையாது. 46 ஆண்டுகளாக அவர்களை ஒடுக்கும் மிருகத்தனமான சர்வாதிகாரத்திற்கு எதிரானது” என பேசியுள்ளார். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை பாராட்டியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இதுபோன்ற இன்னும் நிறைய நடக்கவிருப்பதாக ஈரானை எச்சரித்துள்ளார். அந்நாட்டின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் அமெரிக்காவின் பங்களிப்பு இருந்ததா என்று கேட்டபோது, "நான் அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மக்கள் எதிர்ப்பு:
ஈரானின் ஏவுகணைகள் குடியிருப்பு பகுதிகளில் தாக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த சிலர், இதிலிருந்தே தெரியும் யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள்? என்று என இஸ்ரேலுக்கு ஆதரவாக பதிவிட்டனர். அதற்கு கமெண்ட்களில் பதிலளித்த ஏராளமானோர், உங்கள் கண்களுக்கு பாலஸ்தீனம் தெரியவில்லையா? 55 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்களை கொன்று குவித்தது யார்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.





















