விடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா
யார் முதலமைச்சராக இருந்தாலும் சரி, உள்துறை எங்களுக்கு தான் வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்து மகாராஷ்டிராவில் அந்த துறையை மீண்டும் தங்கள் வசமாக்கியுள்ளது பாஜக.
மகாராஷ்டிட சட்டப்பேரவை தேர்தல் பாஜக, ஏக் நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா, அஜித் பவார் தரப்பு தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராகவும், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் துணை முதலமைச்சர்களாகவும் பதவியேற்றுள்ளனர். முதலமைச்சர் பதவியை விட உள்துறையை யார் வைத்துக் கொள்வது என்பதில் பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்தது.
கடந்த ஆட்சியில் முதலமைச்சர் பதவியை ஏக்நாத் ஷிண்டேவுக்கு கொடுத்த போதும் உள்துறையை தங்கள் வசமே வைத்திருந்தது பாஜக. அதனால் இந்த முறை எப்படியாவது உள்துறையை வாங்கி விடலாம் என போராடிய ஏக் நாத் ஷிண்டேவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. உள்துறை எங்களுக்கு தான் வேண்டும் என்பதில் பாஜக விடாப்பிடியாக இருந்த நிலையில், உள்துறை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வசமே சென்றுள்ளது.
நேற்று அமைச்சரவை பதவியேற்றதில் 19 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள். சிவசேனாவில் இருந்து 11 பேருக்கும் தேசியவாத காங்கிரஸில் இருந்து 9 பேருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஆனால் இப்போதே ஏக் நாத் ஷிண்டேவுக்கு நெருக்கடி ஆரம்பாகிவிட்டது. அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் சிவசேனா எம் எல் ஏ நரேந்திர போண்டேகர் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்காதது, உள்துறையை மீண்டும் பாஜகவுக்கே விட்டுக் கொடுத்தது போன்ற காரணங்களால் ஏக் நாத் ஷிண்டே தரப்பு எம்.எல்.ஏக்கள் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் அவர்கள் உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா பக்கம் திரும்பி விடுவார்களோ என்ற பயம் ஏக் நாத் ஷிண்டேவுக்கு வந்துள்ளதாக சொல்கின்றனர்.
அமைச்சர்களுக்கு இன்னும் துறைகள் அறிவிக்கப்படாத நிலையில், முக்கியமான துறைகளை எங்களுக்கு கொடுங்கள், இல்லையென்றால் கட்சிக்குள் பிரச்னை வர வாய்ப்புள்ளது என ஏக் நாத் ஷிண்டே பாஜகவை நெருக்குவதாக கூறப்படுகிறது.