ADMK NTK Alliance: சீனுக்கு வந்த EPS.. சீமானின் பக்கா ஸ்கெட்ச். அதிமுக- நாதக கூட்டணி?
ADMK NTK Alliance: சீமானை கூட்டணிக்கு இழுக்க பாஜக தூது அனுப்பி வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது எடப்பாடி பழனிச்சாமியே நேரடியாக களமிறங்கி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்கின்றனர்.

சீமானை கூட்டணிக்கு இழுக்க பாஜக தூது அனுப்பி வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது எடப்பாடி பழனிச்சாமியே நேரடியாக களமிறங்கி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்கின்றனர். அதுவும் சமீபத்தில் இபிஎஸ்-ஐ சீமான் புகழ்ந்து தள்ளியுள்ளது கூட்டணிக்கான அச்சாரமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
அதிமுகவுடன் நாதக கூட்டணி?
இதுவரை தேர்களில் தனித்து களம் கண்ட நாம் தமிழர் கட்சியை சுற்றி கூட்டணி பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சீமானுக்கு தூது அனுப்பி வந்த நிலையில் திடீரென பாஜகவுடன் கைகோர்த்தார். அதன்பிறகு பாஜக தரப்பில் இருந்தும் சீமானிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வெளியானது. பாஜகவை பாராட்டுவது, அண்ணாமலையுடன் ஒரே மேடையை பகிர்ந்து கொள்வது என அதற்கான அறிகுறிகளும் தென்பட்டன.
சீமான் வாழ்த்து:
இந்தநிலையில் மீண்டும் தனித்து தான் போட்டி என சொல்ல ஆரம்பித்த சீமான், அதிமுகவை அட்டாக் செய்யும் ஆயுதத்தை கையில் எடுத்தார். சமீபத்தில் நிலைமை மீண்டும் தலைகீழாக மாறியுள்ளது. இபிஎஸ் பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் இபிஎஸ் தலைமையிலான ஆட்சியை புகழ்ந்து தள்ளியுள்ளார் சீமான்.
நாம் தமிழர் கட்சி சார்பாக நான் முன்வைத்த கோரிக்கையை ஏற்று தமிழ் இறையோன் முருகப்பெருமானின் வழிபாட்டுத் திருவிழாவான தைப்பூசத்திற்குப் பொது விடுமுறை அளித்தது, அழிவின் விளிம்பிலிருந்த காவிரிப் படுகை மாவட்டங்களை மீட்டெடுக்க, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்தது நீட் தேர்வு பாதிப்புகளிலிருந்து கிராமப்புற ஏழை அரசுப்பள்ளி மாணவர்களை ஓரளவாவது பாதுகாக்கும் வகையில் 7.5% இடஒதுக்கீடு வழங்கியது, தமிழ்நாட்டிற்கு 11 அரசு மருத்துவக்கல்லூரிகளைக் கொண்டுவந்தது என அரும்பணிகள் பல ஆற்றிய எடப்பாடி பழனிசாமி, இன்னும் பல ஆண்டுகள் உடல் நலனுடனும், உள்ள மகிழ்வுடனும் நலமோடு வாழ்ந்து மக்கள் தொண்டாற்றிட என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள் என்று கூறியிருந்தார்.
கூட்டணி பேச்சுவார்த்தை:
இதன் பின்னணியில் இபிஎஸ் சீமானுடன் நடத்தும் பேச்சுவார்த்தையே காரணம் என கூறப்படுகிறது. பாஜக பேச்சுவார்த்தை நடத்தி ஒத்துவராததால் எடப்பாடி பழனிச்சாமி களத்தில் குதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க நினைக்கும் இபிஎஸ், விஜய் இந்த கூட்டணிக்கு பக்கம் வர முரண்டு பிடிப்பதால் சீமானுக்கு தூண்டில் போட்டு வருகிறார்.
எத்தனை தொகுதிகள் ஒதுக்கலாம் என்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. தனித்து போட்டியிடுவதற்கு பதிலாக கூட்டணியில் இணைந்தால் நாம் தமிழர் சார்பாக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு நுழைவார்கள் என்பதை வைத்தே சீமானிடம் அதிமுக பேசி வருவதாக சொல்கின்றனர். இருந்தாலும் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கொள்கை ரீதியாக கட்சிக்கு அது பின்னடைவாக அமைந்து விடுமோ என சீமான் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த முறை சட்டப்பேரவைக்குள் நாம் தமிழர் செல்லவேண்டும் என்பதற்காக சீமான் இறங்கி வர வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.






















