Kamalhaasan Controversy Movies: களத்தூர் கண்ணம்மா முதல் தக் லைஃப் வரை! சர்ச்சையில் சிக்கிய கமல்ஹாசனின் படங்கள்!
சினிமா துறையிலும் சரி, பர்சனல் விஷயங்களிலும் சரி சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத பிரபலமான கமல்ஹாசனுக்கு தலைவலி கொடுத்த சர்ச்சை படங்கள் குறித்து பார்ப்போம்.

களத்தூர் கண்ணம்மா:
தன்னுடைய 5 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் அறிமுகமானவர் தான் கமல் ஹாசன். முதல் படத்திலேயே, ஜெமினி கணேசன், சாவித்திரி போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் நடித்தார். தன்னுடைய மழலைத்தனம் மாறாத பேச்சாலும், எதார்த்தமான நடிப்பாலும் ஒட்டு மொத்த ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட கமல், இந்த படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றார். கமல் ஹாசன் தேசிய விருதை பெற்ற அதே ஆண்டு, மற்றொரு குழந்தை நட்சத்திரம் தான், இந்த விருதை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கமல் தேசிய விருது வென்றது அப்போதே சர்ச்சையாக பேசப்பட்ட விஷயமாக இருந்ததாம்.
தேவர் மகன்:
1992-ஆம் ஆண்டு கமல் எழுதி, தயாரித்து, நடித்த திரைப்படம் 'தேவர் மகன்'. பரதன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், சிவாஜி கணேசன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். 'தேவர் மகன்' திரைப்படத்தில் சாதி வன்முறையை கமல் சித்தரித்த விதம், குறிப்பிட்ட சாதியினரை கோபம் கொள்ள வைத்தது. இந்த படத்தை வெளியிட கூடாது என்று பிரச்சனைகள் எழுந்த நிலையில், பின்னர் ஒரு வழியாக படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஹே ராம்:
கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரைப்படம் ஹே ராம். வரலாற்று கதை களத்தில் உருவான இந்த படம் 2000-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ஷாருக்கான், ராணி முகர்ஜி, ஹேமா மாலினி போன்ற பலர் நடித்திருந்தனர். இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல சர்ச்சைகளை எதிர்கொண்டது. குறிப்பாக கமல் இஸ்லாமியர்களை தேச துரோகி போல் சித்தரித்துள்ளதாகவும், மகாத்மா காந்தி மீது அவதூறு பரப்பும் காட்சிகள் இடம்பெற்றதாக கூறப்பட்டது. பின்னர் இது குறித்து கமல் விளக்கம் கொடுத்த பின்னர், படம் வெளியாகி... எந்த ஒரு சர்ச்சையும் இன்றி நல்ல வரவேற்பபை பெற்றது.
விருமாண்டி:
உலக நாயகன் கமல்ஹாசன் இயக்கி - தயாரித்து நடித்திருந்த திரைப்படம் 'விருமாண்டி'. 2004-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த படத்தில் அபிராமி, பசுபதி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு முன்பு 'சண்டியர்' என பெயரிடப்பட்டிருந்ததால், இது தலித் மக்களுக்கு எதிரான படம் என பிரச்சனை ஏற்பட்டது. இதை தொடர்ந்து 'சண்டியர்' என்கிற பெயர் 'விருமாண்டி' என்று மாற்றப்பட்டு, படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
அடுத்து வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்:
2004-ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் மற்றொரு படமான வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படமும் மருத்துவர்கள் தரப்பில் எதிர்ப்பை பெற்றது. இந்தியில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தின் தலைப்பு, டாக்டர்களை மோசமானவர்கள் என சித்தரிப்பது போல் உள்ளது என வழக்கு தொடரப்பட்ட நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர்... தலைப்புக்கு ஆட்சேபனை இல்லை என்று தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

தசாவதாரம்:
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் 2008-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தசாவதாரம். இப்படம் சைனவர்களுக்கும் - வைணவர்களுக்கு இடையேயான மோதலை எடுத்து காட்டி இருந்ததால், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு இப்படத்தை வெளியிட கூடாது என எதிர்ப்பு தெரிவித்து. ஆனால் பின்னர் படம் வெளியாகி, 200 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.
விஸ்வரூபம்:
கமல்ஹாசன் இயக்கி தயாரித்து நடித்திருந்த திரைப்படங்களில் ஒன்று விஸ்வரூபம். இந்த படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. ஆனால் மிகவும் போராடி இந்த படத்தை கமல் வெளியிட்டார். படம் ரிலீசானத்துக்கு பின்னரே ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதே போன்ற பிரச்சனை கமல்ஹாசனின் என்னை போல் ஒருவன் படத்திற்கும் வந்தது குறிப்பிடத்தக்கது.
தக் லைஃப்:
தற்போது கமல், 'தக் லைஃப்' பட சர்ச்சையில் சிக்கி உள்ளார். இந்த படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன், கன்னடம் தமிழில் இருந்து பிறந்த மொழி என்பது போல் கூறி இருந்தார். இது தான் இப்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. கமல் ஹாசன் தன்னுடைய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடகா முதல்வர் சித்த ராமையா உட்பட பலரும் கூறி வரும் நிலையில்... கமல் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறி தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். எனவே கர்நாடகாவில் இப்படத்தை வெளியிட மாட்டோம் என்று கன்னடர்கள் போர் கொடி தூக்கியுள்ளனர். இந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து 'தக் லைஃப்' ரிலீஸ் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.





















