Virat Kohli: "நம்பவே முடியல.. எல்லாத்தையும் கொடுத்துருக்கேன்.." கண்கலங்கிய சாம்பியன் விராட் கோலி
ஆர்சிபி அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற பிறகு விராட் கோலி இந்த உணர்வு நம்ப முடியவில்லை என்று மகிழ்ச்சியுடன் பேட்டி அளித்தார்.

ஐபிஎல் தொடரில் முதன்முறை சாம்பியன் மகுடம் சூடப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் போட்டியில் ஆர்சிபி - பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 190 ரன்கள் எடுத்தது, இதையடுத்து, 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆர்சிபி வீரர்கள் பந்துவீச்சில் நெருக்கடி அளித்தனர்.
ஆர்சிபி சாம்பியன்:
குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், யஷ் தயாள், ஷெப்பர்ட், சுயாஷ் சர்மா ஆகியோரது சிறப்பான பந்துவீச்சால் ஆர்சிபி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை முதன்முறை கைப்பற்றியது. ஆர்சிபி அணி வெற்றி பெற்றதும் ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டனும், அந்த அணிக்காக 18 ஆண்டுகளாக ஆடி வரும் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
வெற்றிக்கு பிறகு விராட் கோலி மகிழ்ச்சியுடன் அளித்த பேட்டியில் கூறியதாவது,
நம்ப முடியாத உணர்வு:
"இந்த வெற்றி ரசிகர்களுக்கும், அணிக்குமானது. இது 18 நீண்ட ஆண்டுகள். இந்த அணிக்கு எனது இளமை, உற்சாகம் மற்றும் அனுபவத்தை நான் அளித்துள்ளேன். ஒவ்வொரு சீசனிலும் அதை வெல்ல முயற்சித்தேன், எனக்குக் கிடைத்த அனைத்தையும் கொடுத்தேன்.
We’re not crying. You are.
— Royal Challengers Bengaluru (@RCBTweets) June 3, 2025
pic.twitter.com/xIjM8lL9zl
இறுதியாக அதைப் பெறுவது நம்பமுடியாத உணர்வு. இந்த நாள் வரும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை, கடைசி பந்து வீசப்பட்ட பிறகு நான் உணர்ச்சிவசப்பட்டேன். எனது ஒவ்வொரு அளவு சக்தியையும் கொடுத்தேன், இது ஒரு அற்புதமான உணர்வு. டிவிலியர்ஸ் அணிக்காகச் செய்தது மகத்தானது, அவரிடம் 'இந்த வெற்றி எங்களுடையது போலவே உங்களுடையது. நீங்கள் எங்களுடன் கொண்டாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்' என்று கூறினார்.
குழந்தையைப் போல உறங்குவேன்:
நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அவர் ஓய்வு பெற்றிருந்தாலும், அவர் அணியில் பெரும்பாலான முறை மேன் ஆஃப் தி மேட்ச்சாக இருந்திருக்கிறார். லீக், அணி மற்றும் என் மீது அவர் ஏற்படுத்திய தாக்கத்தை இது உங்களுக்குச் சொல்கிறது. அவர் மேடையில் இருக்கவும், கோப்பையை உயர்த்தவும் தகுதியானவர். இன்று இரவு ஒரு குழந்தையைப் போல உறங்குவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.




















