உங்களுக்கு நாங்க இருக்கிறோம்... தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் சொன்னது எதற்காக?
597 குழந்தைகளுக்கு தாய் தந்தை இருவரும் இல்லை என்றும் 2900 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தாய் இல்லை, 12,000 மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தை மட்டும் இல்லை என ஆய்வின்போது தெரிய வந்துள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் 597 தாய் தந்தை இல்லாத குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைகள் பள்ளி இடைநிற்றலை தடுக்கும் வகையிலும். அவர்கள் தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது என தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.
தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பின்னர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நிருபர்களிடம் கூறியதாவது:

தஞ்சை மாவட்டத்தில் 597 தாய், தந்தை இல்லாத குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. தாய், தந்தை இல்லாத குழந்தைகள் கல்வி இடைநிற்றலை தடுக்கும் வகையிலும் அவர்கள் தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.
பள்ளி படிப்பை தொடர வேண்டும், மேற்படிப்புக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு எந்தெந்த குழந்தைகளுக்கு தாய், தந்தை இல்லாமல் இருக்கிறார்களோ இதன் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 597 குழந்தைகளுக்கு தாய் தந்தை இருவரும் இல்லை என்றும் 2900 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தாய் இல்லை, 12,000 மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தை மட்டும் இல்லை என ஆய்வின்போது தெரிய வந்துள்ளது. முதல் கட்டமாக தாய் தந்தை இருவரின் ஆதரவு இல்லாமல் பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கு அரசின் சலுகைகள் கிடைக்கப்பெற அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் அந்த குழந்தைகளின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு அரசின் மூலம் என்ன உதவிகள் செய்ய முடியும் என கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த மாத இறுதிக்குள் அந்த பணி முடிவடையும். இந்த சலுகைகள் அவர்களுக்கு கிடைக்கும் வகையில் இதனை கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அந்த குழந்தைகள் படிப்பை எக்காரணத்தை கொண்டும் இடைநிறுத்தாமல் படிப்பை தொடர பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணி நீர்வளத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை மூலமாக நடைபெற்று வருகிறது. நீர்வளத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணி 93 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அதேபோல் வேளாண் பொறியியல் துறை மூலம் நடைபெறக்கூடிய பணிகள் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மேட்டூர் அணை திறக்கும் போது விவசாயிகள் சாகுபடி பணியை முழுமையாக மேற்கொள்ளும் வகையில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதற்குள்ளாக அனைத்து பணிகளும் முடிவடையும். மேலும் விதை நெல் வந்து கொண்டே உள்ளது. தட்டுப்பாடுகள் ஏதும் இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தரமான விதைகள் கிடைக்கப்பெறுகிறதா என்பது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் மூலம் அந்தந்த பகுதிகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.





















