Operation Sindoor: 23 நிமிடங்கள்; சீன பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, இலக்குகளை அடித்த இந்திய ராணுவம்
ஆபரேஷன் சிந்தூரின்போது, பாகிஸ்தானில் இருந்த சீன தயாரிப்பு வான் பாதுகாப்பு அமைப்பையும் மீறி, அதனை கடந்து சென்று வெறும் 23 நிமிடங்களில் இந்தியா இலக்குகளை தாக்கி அழித்ததாக மத்திய அரசு கூறியுள்ளது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரில், இந்திய ராணுவம் அசத்தியது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூரின் சில நடவடிக்கைகள் எப்படி நடத்தப்பட்டன என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. அதில், பாகிஸ்தானில் இருந்த சீன பாதுகாப்பு அமைப்பை மீறி, வெறும் 23 நிமிடங்களில் இலக்குகளை தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூர்‘
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 26 அப்பாவி சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் வேட்டையை, ஆபரேஷன் சிந்தூர் என பெயரிட்டு இந்திய ராணுவம் தொடங்கியது.
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒரே இரவில், ஒரே நேரத்தில் தீவிரவாதிகளின் 9 நிலைகள் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தி, அவற்றை அழித்தது இந்திய ராணுவம். ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலை பாகிஸ்தானால் முறியடிக்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து, எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம், பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் அப்பாவி மக்கள் மீது தாக்குதலை தொடங்கியது. இதையும் வெற்றிகரமாக முறியடித்த இந்திய ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுத்து விரட்டியது. இதைத் தொடர்ந்த, இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் பல்வேறு நாடுகளின் உதவியை நாடியது. இந்நிலையில், இரு நாடுகளுக்குமிடையே சமசரம் செய்துவைக்க தயார் என அறிவித்த அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின், இரு நாடுகளுக்குமிடையேயான பரஸ்பர தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு விளக்கம்
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூரின்போது சீன வான் பாதுகாப்பு அமைப்பையும் மீறி, இந்தியா இலக்குகளை தாக்கி அழித்தது எப்படி என்பது குறித்து மத்திய அரசு விளக்கியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்திய நகரங்கள் மற்றும் ராணுவ தளங்கள் மீது, சீனா மற்றும் துருக்கியின் தயாரிப்புகளான பிஎல்-15 ஏவுகணைகள், பேரக்தர் வகை ட்ரோன்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு பாகிஸ்தான் நடத்திய தாக்குதல், இந்திய தயாரிப்பு ஆயுதங்களைக் கொண்டே வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர், இந்திய ராணுவத்தின் துல்லியத்தை மட்டும் காட்டவில்லை என்றும், மாறாக, தொழில்நுட்பத்தில் தற்சார்பையும், நாட்டின் பாதுகாப்பு கோட்பாட்டில் ஒரு மைல்கல்லையும் எடுத்துக்கட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர், சமச்சீரற்ற போரின் பரிணாம வடிவத்திற்கு எதிரான அளவீடு செய்யப்பட்ட ராணுவ பதிலடியாக வெளிப்பட்டதாகவும், இந்தியாவின் பதில், வேண்டுமென்றே, துல்லியமாக வியூகத்துடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன தயாரிப்பு பாதுகாப்பு அமைப்புகளின் கண்ணில் மண்ணை தூவிய இந்தியா
ஆபரேஷன் சிந்தூரின்போது, சீன பாதுகாப்பு அமைப்புகளையும் மீறி, அவற்றை கடந்த இந்திய போர் விமானங்களும், அலைந்து திரிந்து தாக்கும் ட்ரோன் வெடிகுண்டுகளும், பாகிஸ்தானின் நூர் கான் மற்றும் ரஹிம்யர் கான் விமானத் தளங்கள், முக்கிய ராணுவ தளங்களையும் தாக்கியதாகவும், அதிலும் இந்திய தயாரிப்புகளைக் கொண்டோ தாக்கி அழித்ததாகவும், இவை அனைத்தும், 23 நிமிடங்களில் நிகழ்த்தப்பட்டதாகவும் இந்திய அரசு வெளியிட்டள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வான்வழித் தாக்குதல்கள், எல்லைக் கோட்டையோ, சர்வதேச எல்லையையோ கடக்காமலேயே நிகழ்த்தப்பட்டதாகவும், இந்தியாவிற்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகாஷ் ஏவுகணைகள், பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களை முறியடித்ததாகவும், தரையிலிருந்து சென்று விண்ணில் பாய்ந்து தாக்கும் QRSAM அமைப்புகள், துருக்கி தயாரிப்பு ட்ரோன்களை அழித்ததாகவும், வான் கண்காணிப்பிற்கு இந்திய தயாரிப்புகளான ஆருத்ரா மற்றம் அஷ்வினி ராடார்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், 360 டிகிரியில் கண்காணிப்பு பணியை நேத்ரா AEW&C அமைப்பு முதன் முறையாக பயன்படுத்தப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதோடு, பாகிஸ்தான் நடத்திய தாக்குதலின்போது தாக்கி அழிக்கப்பட்ட சீன தயாரிப்பான பிஎல்-15 ஏவுகணை, துருக்கி தயாரிப்பான யிஹா, தொலைதூரம் தாக்கும் ராக்கெட்டுகள் ஆகியவற்றின் சிதைந்த பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளின் ஆயுதங்களை பாகிஸ்தான் பயன்படுத்திய நிலையில், அவற்றை எல்லாம் முறியடித்து, இந்திய தயாரிப்புகளே சிறந்தவைகளாக இருந்துள்ளது என மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















