Cabinet Meeting Outcomes: ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் சூப்பர் ப்ளான் - கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அமைச்சரவை
மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஸ்ரீஹரிகோட்டாவில் 3,985 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட உள்ள முக்கியமான திட்டம் ஒன்றிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், பல்வேறு திட்டங்களுக்கும் அனுமமி வழங்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது, ஸ்ரீஹரிகோட்டாவில் செயல்படுத்தப்பட உள்ள திட்டம். அது குறித்து பார்க்கலாம்.
‘ஆபரேஷன் சிந்தூர்‘ குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதம்
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகளை குறி வைத்து, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இந்தியா துல்லிய தாக்குதலை நடத்தி, ஒரே இரவில் 9 தீவிரவாதிகளின் நிலைகளை தாக்கி அழித்தது. இதனால், இருநாடுகளுக்குமிடையேயான போர் பதற்றம் அதிகரித்தது.
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அதிதுமீறி அப்பாவி பொதுமக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. அதை இந்திய ராணுவம் முறியடித்தது. இந்த நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும், பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டது. இதை, கடந்த 10-ம் தேதி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டம்
அதைத் தொடர்ந்து, எல்லையில் தற்போது அமைதி நிலவி வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்‘ குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டார் பங்கேற்றனர்.
அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்
இந்த அமைச்சரவை கூட்டத்தில், ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்துடன், மேலும் சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. அது குறித்து, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
அதில் முக்கியமான ஒரு முடிவு, ஸ்ரீஹரிகோட்டாவில் 3,985.86 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் அமையும் இந்த ராக்கெட் ஏவுதளம் 4 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் உள்ளிட்ட முக்கியமான எதிர்கால திட்டங்களுக்கு இந்த ஏவுதளம் பயன்படுத்தப்படும். 1000 டன் எடையுள்ள ராக்கெட்டுகளை ஏவும் விதமாக இந்த ஏவுதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், உத்தர பிரதேசத்தில் 3,706 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 6-வத செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் ஜீவர் பகுதியில் அமையும் இந்த தொழிற்சாலையை HCL மற்றும் பிக்ஸ்கான் நிறுவனங்கள் இணைந்து உருவாக்குகின்றன. இதில், மொபைல் ஃபோன், லேப்டாப், ஆட்டோமொபைல் உள்ளிட்டவற்றிக்கு தேவையான டிஸ்ப்ளே டிரைவர் Chip-கள் தயாரிக்கப்பட உள்ளன. ஆண்டுக்கு 3.6 கோடி Chip-கள் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை 2027-ம் ஆண்டு செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அமைச்சரவை கூட்டத்தில், நாடு முழுவதும் அரிய கனிம வளத் திட்டங்களை செயல்படுத்த 16,300 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.





















