"இழப்பு எல்லாம் முக்கியம் இல்ல.. விஷத்தை கக்கியது பாகிஸ்தான்" முப்படை தலைமை தளபதி கருத்து
"ஒரு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நீங்கள் இன்னிங்ஸ் தோல்வியில் வெற்றி பெற்றால், எத்தனை விக்கெட்டுகள், எத்தனை பந்துகள், எத்தனை வீரர்கள் என்ற கேள்விக்கே இடமில்லை" என முப்படைகளின் தலைமை தளபதி தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூரின்போது ஏற்பட்ட இழப்புகள் முக்கியம் அல்ல என்றும் அந்த நேரத்தில் எப்படி செயல்பட்டோம் என்பதுதான் முக்கியம் என முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விஷத்தை பரப்பு வந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
டெஸ்ட் போட்டியுடன் போரை ஒப்பிட்ட அனில் சவுகான்:
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் 'வருங்காலத்தில் போர் மற்றும் போர்முறைகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசுகையில், "எங்கள் தரப்பில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து என்னிடம் கேட்டபோது, இவை முக்கியமில்லை என்று சொன்னேன்.
முடிவுகளும் நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பதும் முக்கியம். இழப்புகளைப் பற்றிப் பேசுவது அவ்வளவு சரியாக இருக்காது. ஒரு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நீங்கள் இன்னிங்ஸ் தோல்வியில் வெற்றி பெற்றால், எத்தனை விக்கெட்டுகள், எத்தனை பந்துகள், எத்தனை வீரர்கள் என்ற கேள்விக்கே இடமில்லை.
தொழில்நுட்ப அளவுருக்களின் அடிப்படையில், இந்த குறிப்பிட்ட தரவை எடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்வோம். எத்தனை விமானங்களை அழித்தோம், எத்தனை ரேடார்களை அழித்தோம் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்வோம். அதைப் பற்றிய தோராயமான மதிப்பீட்டைச் செய்து விரைவில் அதை வெளியிடுவோம்" என்றார்.
"விஷத்தை கக்கியது பாகிஸ்தான்"
தொடர்ந்து விரிவாக பேசிய அவர், "மே 7 ஆம் தேதி நாங்கள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தொடங்கிய நாளிலேயே பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவித்திருந்தோம். பாகிஸ்தான் தரப்பிலிருந்து வாய்ச்சவடால் எழுந்தபோது, பாகிஸ்தான் எங்களைத் தாக்கினால், ராணுவ நிலைகளைத் தாக்கினால், நாங்கள் அவர்களைத் திருப்பித் தாக்குவோம். அவர்களை இன்னும் கடுமையாகத் தாக்குவோம் என்றும் கூறினோம்.
மே 10 ஆம் தேதி, அதிகாலை 1 மணியளவில், அவர்களின் (பாகிஸ்தானின்) நோக்கம் 48 மணி நேரத்தில் இந்தியாவை மண்டியிட வைப்பதாகும். பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஏதோ ஒரு வகையில், அவர்கள் இந்த மோதலை அதிகரித்துள்ளனர். நாங்கள் உண்மையில் பயங்கரவாத இலக்குகளை மட்டுமே தாக்கினோம். 48 மணி நேரம் தொடரும் என்று அவர்கள் நினைத்த நடவடிக்கைகள், சுமார் 8 மணி நேரத்தில் நிறுத்தப்பட்டன. பின்னர் அவர்கள் தொலைபேசியை எடுத்து பேச விரும்புவதாகக் கூறினர்.
பஹல்காமில் நடந்ததற்கு சில வாரங்களுக்கு முன்பு (பாகிஸ்தான்) ஜெனரல் அசிம் முனீர் ஒரு உரையில் இந்தியாவிற்கும் இந்துக்களுக்கும் எதிராக விஷத்தை கக்கினார். தண்ணீரும் ரத்தமும் ஒன்றாகப் பாயாது" என்றார்.






















