(Source: ECI | ABP NEWS)
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
IPL RCB Champion: பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி முதன்முறை சாம்பியன் மகுடத்தை சூடியுள்ளது.

IPL RCB Champion: ஐபிஎல் தொடரில் நடப்பாண்டிற்கான சாம்பியன் யார்? என்பதை தீர்மானிக்கும் போட்டியில் ஆர்சிபி - பஞ்சாப் இரு அணிகளும் மோதின. முதல் முறை கோப்பையை கையில் ஏந்தும் கனவுடன் இரு அணிகளும் இன்று களத்தில் இறங்கின. அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப்முதலில் பந்துவீசியது.
191 ரன்கள் இலக்கு:
பில் சால்ட் அதிரடியாக தொடங்கினாலும் பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் சற்று நெருக்கடி அளித்தனர். ஆனாலும், கோலி ஒரு முனையில் நிதானமாக ஆட படிதார், லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா அதிரடியாக ஆடியதால் பஞ்சாப்பிற்கு 191 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதிரடி தொடக்கம்:
இதையடுத்து, பிரப்சிம்ரன் - பிரியன்ஷ் ஆர்யா ஜோடி ஆட்டத்தை தொடங்கினர். முதல் பந்திலே பவுண்டரியுடன் தொடங்கிய பஞ்சாப் புவனேஷ்வர், யஷ் தயாள் வீசிய முதல் இரண்டு ஓவரில் அதிரடி காட்டியது. இதையடுத்து, 3வது ஓவரை வீசிய ஹேசில்வுட் நெருக்கடி அளித்தார். அவரது ஓவரில் கிடைத்த எளிதான கேட்ச்சை ஷெப்பர்ட் கோட்டை விட்டார்.
ஹேசில்வுட் அபாரம்:
இதனால், வாழ்வு பெற்றாலும் பிரப்சிம்ரன் தடுமாறினார். ஹேசில்வுட் வீசிய 5வது ஓவரில் சிறப்பாக ஆடிய பிரியன்ஷ் ஆர்யா அவுட்டானார். அவர் 19 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்து சால்ட் பிடித்த அபாரமான கேட்ச்சால் அவுட்டானார்.
ஆட்டத்தை மாற்றிய குருணல் பாண்ட்யா:
அடுத்து ஜோஷ் இங்கிலிஷ் - பிரப்சிம்ரன் ஜோடி சேர்ந்தனர். பிரப்சிம்ரன் தடுமாற இங்கிலிஷ் அதிரடி காட்டினார், கேப்டன் ரஜத் படிதார் குருணல் பாண்ட்யாவை அழைத்தார். அவரது முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. பாண்ட்யா முதல் ஓவரை கட்டுக்கோப்பாக வீச, அவர் வீசிய இரண்டாவது ஓவரில் பிரப்சிம்ரன் அவுட்டானார். அவர் 22 பந்துகளில் 2 சிக்ஸருடன் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இதையடுத்து, கடந்த போட்டியில் மும்பைக்கு எதிராக அசத்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னில் ஷெப்பர்ட் பந்தில் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதன்பின்னர், ஆர்சிபி அணி உற்சாகமாக ஆடினர். 79 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் இங்கிலிஷ் ஒரு முனையில் ஏதுவான பந்துகளை சிக்ஸருக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.
திருப்பம் தந்த புவனேஷ்வர்:
குருணல் பாண்ட்யாவை வைத்து பஞ்சாப்பிற்கு தொடர்ந்து படிதார் நெருக்கடி அளித்துக் கொண்டிருந்தார். அதற்கு பலனாக ஆர்சிபியை அச்சுறுத்திய இங்கிலிஷ் அவுட்டானார். அவர் சிக்ஸருக்கு விளாசிய பந்தை லிவிங்ஸ்டன் பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடித்தார். 23 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்ஸருடன் 39 ரன்களுக்கு அவுட்டாக 98 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது பஞ்சாப்.
இதையடுத்து, நெருக்கடியான கட்டத்தில் நேகல் வதேரா - ஷஷாங்க் சிங் ஜோடி சேர்ந்தனர். ஷஷாங்க் சிங் அதிரடியாக ஆட முயற்சித்ததால் கடைசி 24 பந்துகளில் 55 ரன்கள் பஞ்சாப்பிற்கு தேவைப்பட்டது. அப்போது, 17வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
அவரது பந்தில் நேகல் வதேரா 18 ரன்களில் அவுட்டாக, அதே ஓவரில் வந்தவுடன் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை தொடங்கிய ஸ்டோய்னிஸ் அடுத்த பந்திலே புவனேஷ்வர் பந்தில் அவுட்டானார். அடுத்த ஓவரிலே ஓமர்சாய் 1 ரன்னில் அவுட்டாக ஆர்சிபியின் வெற்றி ஏறத்தாழ உறுதியானது.
ஷஷாங்க் போராட்டம்:
பஞ்சாப் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் 2 பந்துகளை டாட் பாலாக வீசி ஹேசில்வுட் அசத்தி ஆர்சிபி வெற்றியை உறுதி செய்தார். தோல்வி உறுதியான பிறகு ஹேசில்வுட் வீசிய அடுத்த 4 பந்துகளையும் ஷஷாங்க் சிங் சிக்ஸராக விளாசினார்.
ஆர்சிபி சாம்பியன்:
ஆனாலும், அதனால் எந்த பயனும் பஞ்சாபிற்கு கிடைக்கவில்லை. கடைசியாக ஆர்சிபி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷஷாங்க் சிங் கடைசி வரை அவுட்டாகாமல் 30 பந்துகளில் 3 பவுண்டரி 6 சிக்ஸருடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். குருணல்பாண்ட்யா 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
புவனேஷ்வர் 2 விக்கெட்டுகளையும், யஷ் தயாள், ஹேசில்வுட், ஷெப்பர்ட் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. வெற்றி உறுதியானதும் விராட் கோலி ஆனந்தத்தில் கண்கலங்கினார். விராட் கோலியை கட்டியணைத்து ஆர்சிபி வீரர்களும் கண்கலங்கினர்.




















