தஞ்சை மாவட்டத்தில் 2,18,290 மாணவ, மாணவிகள் பயன் பெறுகின்றனர்... மாவட்ட கலெக்டர் தகவல்
புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் 2,18,290 மாணவ, மாணவிகள் கல்வி உபகரணங்களை பெற்று பயன்பெறுகின்றனர் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம் அரண்மனை வளாகம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி முன்னிலையில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெற்றி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்திலும் கல்வி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனிற்காக பள்ளிகளில் இணைய வசதி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து, தமிழகத்தின் கல்வித் தரத்தினை உயர்த்திட இல்லம் தேடி கல்வி, நம் பள்ளி நம் பெருமை, எண்ணும் எழுத்தும், நம்ம ஸ்கூல் பவுண்டேசன், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு போன்ற சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துதல், பள்ளிகளின் வகுப்பறைக் கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிவறைகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், திறன் வகுப்பறைகள் அமைத்தல், உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைத்தல், மாதிரி பள்ளிகளை உருவாக்குதல், காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்களோடு, புத்தகப்பைகள், காலணிகள், காலேந்திகள், காலுறைகள், மழைக்கோட்டுகள், கம்பளிச்சட்டைகள், வண்ணப்பென்சில்கள். கிரையான்ஸ். கணித உபகரணப் பெட்டிகள், கணுக்காலேந்திகள் மற்றும் புவியியல் வரைபடங்கள் என பல்வேறு கல்வி உபகரணங்கள் நெற்றி முதல் வழங்கப்படுகிறது.
தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் 197 (இடை நிலை) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 76,471 (1 முதல் 12 ஆம் வகுப்பு வரை) மாணவர்கள், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 94 (இடை நிலை) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 52,856 (1 முதல் 12 ஆம் வகுப்பு வரை) மாணவர்கள், தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் 738 (தொடக்கக் கல்வி) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 52,463 (1 முதல் 8 ஆம் வகுப்பு வரை) மாணவர்கள், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 648 (தொடக்க கல்வி) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 36,500 (1 முதல் 8 ஆம் வகுப்பு வரை) மாணவர்கள் என மொத்தம் 1,677 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2,18,290 மாணவர்கள் நலத்திட்ட உதவிகளைப் பெற்று பயன் பெறுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அண்ணா துரை, மாவட்ட கல்வி அலுவலர்கள் மாதவன், பழனிவேலு, சுந்தர், அய்யாகண்ணு, மதியழகன், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் தட்சிணாமூர்த்தி, தெய்வபாலன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் ரவிச்சந்திரன், சமூக நல அலுவலர் லதா, தஞ்சாவூர் வட்டாட்சியர் சிவகுமார், மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சந்திரமௌலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





















