வாங்க விஐபிக்களா... வாங்க... சாரட் வண்டியில் ஊர்வலம்: பெற்றோர் முகத்தில் பூரிப்பு
விட்டாச்சு லீவுன்னு ஏப்ரல் எண்ட்டில் பாடி பறந்த மாணவ, மாணவிகள் கோடை விடுமுறை முடிஞ்சிடுச்சு... புது யூனிபார்ம், புத்தகம் என்று பட்டாம்பூச்சிகளால் பறந்து இன்று பள்ளிக்கு வந்தாங்க.

தஞ்சாவூர்: சாரட் வண்டியில் அரசு பள்ளிக்கு மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். இதை கண்டு பெற்றோர்கள் மனம் நெகிழ்ச்சி அடைந்தனர். இது எங்கு நடந்தது தெரியுங்களா?
விட்டாச்சு லீவுன்னு ஏப்ரல் எண்ட்டில் பாடி பறந்த மாணவ, மாணவிகள் கோடை விடுமுறை முடிஞ்சிடுச்சு... புது யூனிபார்ம், புத்தகம் என்று பட்டாம்பூச்சிகளால் பறந்து இன்று (நேற்று) பள்ளிக்கு வந்தாங்க. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளிகளிலும், ஒவ்வொரு விதமாக பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். குறிப்பாக, கிராமப்புற அரசுப்பள்ளியில் தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மைக்குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், கிராமத்தினர் மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் விதமாகவும், மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் புதிது புதிதாக திட்டங்களையும், பள்ளி திறந்தவுடன் மாணவர்களை வரவேற்பு செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்தவகையில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே வேலாம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் செம ஐடியா செய்து அசத்திட்டாங்க போங்க. அட ஆமாங்க... புதிதாக சேர்ந்த 22 மாணவர்களை, சாரட் வண்டியில் கிராமத்தில் உள்ள கோயிலில் இருந்து பள்ளிக்கு டிரம்ஸ் முழங்க அழைச்சுக்கிட்டு வந்தாங்க பாருங்க. சும்மா மாப்பிள்ளை ஊர்வலம் போல் அந்த கிராமமே வாய் பிளந்து மாணவர்களை பார்த்தாங்க. அப்புறம் என்ன மாணவர்களுக்கு முகத்தில கெத்து... பெற்றோர்கள் மனதில் நெகிழ்ச்சி என்று கலவையான அருமையான உணர்வுகள் ஏற்பட்டது.
பள்ளியில் ஏற்கனவே உள்ள பழைய மாணவர்கள் அவர்களை உற்சாகமாக வரவேற்றனர். இதில், பள்ளி தலைமையாசிரியர் சங்கரபாண்டியன், பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர்கள் பாண்டிமீனா, கனிமொழி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குருசாமி கருப்பையா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சந்திரா, துணைத்தலைவர் செல்வகுமாரி, இல்லம்தேடிக்கல்வி தன்னார்வலர் கிருஷ்ணவேணி, பெற்றோர்கள், கிராமமக்கள் கலந்துக்கொண்டனர். இந்த சாரட் வண்டி ஊர்வலம்தான் பேராவூரணி முழுக்க பேசப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் சங்கரபாண்டியன் கூறியதாவது: கடந்த ஆண்டு 72 மாணவர்கள் படித்தனர். இதில் ஐந்தாம் வகுப்பு முடித்து 18 மாணவர்கள் சென்று விட்டனர். தற்போது மாண்வர்களின் எண்ணிக்கையை பள்ளியில் அதிகரிக்க வேண்டும் என பல முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதன் பயனாக 22 மாணவர்கள் இந்தாண்டு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துள்ளனர். இது மகிழ்ச்சியாக உள்ளது. சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்டது கிராம மாணவர்களுக்கு புதியதாக இருந்தால் உற்சாகமாய் பள்ளிக்கு வந்தனர். பெற்றோர்களும் தங்கள் மாணவர்கள் சாரட் வண்டியில் வருவதை கண்டு மனம் மகிழ்ச்சி அடைந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
பெற்றோர்கள் தரப்பில் கூறுகையில், எங்கள் குழந்தைகளை சாரட் வண்டியில் வைத்து மாப்பிள்ளை ஊர்வலம் போல் பள்ளிக்கு அழைத்து சென்ற தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு நாங்க நன்றியை தெரிவிச்சு கொள்கிறோம். எங்கள் குழந்தைகளின் முகத்தில் தெரிஞ்ச அந்த புன்னகையும், மகிழ்ச்சியும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. முதல் நாள் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அழும். ஆனால் இதுபோன்ற ஏற்பாட்டை செய்து எங்கள் குழந்தைகளை உற்சாகப்படுத்திய அனைத்து ஆசிரியர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.
இதுபோல் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலும் விதவிதமாய் யோசித்து மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





















