IPL Final RCB vs PBKS: ஈ சாலா கப் கிடைக்குமா? 191 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஆர்சிபி! கலக்கப்போவது யாரு?
IPL Final RCB vs PBKS:ஆர்சிபி அணி பஞ்சாப் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 190 ரன்கள் எடுத்துள்ள நிலையில் 191 ரன்கள் எடுத்தால் சாம்பியன் என்ற இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியுள்ளது.

IPL Final RCB vs PBKS: நடப்பு சீசனின் சாம்பியன் யார்? என்பதை தீர்மானிக்கும் ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆர்சிபி - பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றனர். டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
பில் சால்ட் அதிரடி தொடக்கம்:
இதையடுத்து, ஆர்சிபி அணிக்காக பில் சால்ட் - விராட் கோலி ஆட்டத்தை தொடங்கினர். சால்ட் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். அவர் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசி ஜெட் வேகத்தில் ஆட்டத்தை தொடங்க அவரது வேகத்திற்கு ஜேமிசன் 2வது ஓவரிலே முற்றுப்புள்ளி வைத்தார். ஜேமிசன் வேகத்தில் அவர் 9 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 16 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அதிரடியும், அவுட்டும்:
அவர் ஆட்டமிழந்த பிறகு வந்த மயங்க் அகர்வால் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். ஓவருக்கு 10 ரன்கள் என்ற ரன்ரேட்டை தக்கவைக்கும் முயற்சியில் ஆர்சிபி ஈடுபட்டது. பவர்ப்ளே முடிந்த அடுத்த ஓவரிலே மயங்க் அகர்வால் சாஹல் சுழலில் அவுட்டானார். அவர் 18 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
56 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த பிறகு கேப்டன் ரஜத் படிதார் - விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். விராட் கோலி நிதானமாக ஆட ரஜத் படிதார் அதிரடியாக ஆடினார். ஆனால் அவரையும் ஜேமிசன் தனது அபாரமான பந்துவீச்சால் அவுட்டாக்கினார். அவரது வேகத்தில் 16 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 26 ரன்கள் எடுத்து ரஜத் படிதார் அவுட்டானார்.
கோலி 43 ரன்கள்:
அவர் ஆட்டமிழந்த பிறகு லிவிங்ஸ்டன் களமிறங்கினார். இந்த ஜோடி ஓரிரு ரன்களாகவே எடுத்தனர். ஆனாலும், அதிரடி தேவைப்பட்ட நிலையில் விராட் கோலி அதிரடிக்கு மாற முயற்சித்தார். ஆனால், அணியின் ஸ்கோர் 131 ரன்களை எட்டியபோது விராட் கோலி அவுட்டானார். அவர் 35 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
கடைசி 5 ஓவர்களில் ஆர்சிபி அதிரடிக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஜிதேஷ் சர்மா அதிரடியாக ஆட மறுமுனையில் அதிரடிக்கு லிவிங்ஸ்டனும் மாறினார். அவர் 15 பந்துகளில் 2 சிக்ஸருடன் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஜேமிசன் பந்தில் அவுட்டானார். இதன்பின்னர், ஜிதேஷ் சர்மா - ரொமாரியோ ஷெப்பர்ட் ஜோடி சேர்ந்தனர். 17 ஓவர்களுக்கு 168 ரன்கள் எடுத்த நிலையில், கடைசி 3 ஓவர்களில் அதிரடி காட்டினால்தான் சவாலான இலக்கை நிர்ணயிக்க முடியும் என்று ஆர்சிபி வியூகம் வகுத்தது.
கட்டுப்படுத்திய பஞ்சாப்:
ஆனால், சிக்ஸரும், பவுண்டரியும் விளாசிக் கொண்டிருந்த ஜிதேஷ் சர்மா விஜயகுமார் வைஷாக் பந்தில் அவுட்டானார். அவர் 10 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 24 ரன்கள் எடுத்து அவுட்டாக, அடுத்து வந்த ஷெப்பர்ட் ஒரு பவுண்டரி 1 சிக்ஸருடன் 17 ரன்களில் அர்ஷ்தீப்சிங் பந்தில் அவுட்டானார். இதனால், ஆர்சிபி அணி 190 ரன்களை எடுத்தது. 191 ரன்கள் எடுத்தார் பஞ்சாப் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும்.
அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் மட்டும் ஷெப்பர்ட், குருணல் பாண்ட்யாவை அவுட்டாக்கினார். அர்ஷ்தீப்சிங் 4 ஓவர்களில் 40 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஜேமிசன் 4 ஓவர்களில் 48 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஓமர்சாய், விஜயகுமார் வைஷாக், சாஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆர்சிபியின் வெற்றி தற்போது அவர்களது பந்துவீச்சாளர்கள் கையில்தான் உள்ளது.




















