South Trains Traffic Change: தென் மாவட்ட மக்களே.! ரயில் போக்குவரத்தில் மாற்றம் - விவரத்த தெரிஞ்சுக்கிட்டு பிளான் பண்ணுங்க
பராமரிப்பு பணி காரணமாக தென் மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மதுரை கோட்ட ரயில்வேவிற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற இருக்கும் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக, பல்வேறு ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளது தெற்கு ரயில்வே. எந்தெந்த ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களை தற்போது காணலாம்.
வாடிப்பட்டி-கொடைரோடு இடையே தண்டவாள பராமரிப்பு பணி
ரயில்களின் போக்குவரத்து மாற்றம் குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுரை கோட்ட ரயில்வேவிற்கு உட்பட்ட வாடிப்பட்டி-கொடைரோடு இடையே உள்ள பகுதிகளில், தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அந்த பாதையில் இயக்கப்படும் தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்து, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எந்தெந்த ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம்.?
அதன்படி, செங்கோட்டை-மயிலாடுதுறை ரயில்(16848), வரும் 6-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை, விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி செல்கிறது. இந்த ரயில், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதேபோல், மறுமார்க்கத்தில், மயிலாடுதுறை-செங்கோட்டை ரயில்(16847), இன்று(04.06.25), வரும் 8-ம் தேதி மற்றும் 11-ம் தேதிகளில், திருச்சியில் இருந்து, காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் வந்தடையும். இந்த ரயில், புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி-சரளப்பள்ளி வாராந்திர சிறப்பு ரயில்(07229) வரும் 6-ம் தேதி மற்றும் 13-ம் தேதிகளில், விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மானாமதுரை மற்றும் காரைக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கன்னியாகுமரி-ஹவுரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்(12666), வரும் 7-ம் தேதி, விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். இந்த ரயில் மானாமதுரை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மாதா வைஷ்ணவதேவி கத்ரா-நெல்லை வாராந்திர ரயில்(16788), நாளை(05.06.25) மற்றும் 12-ம் தேதிகளில், திருச்சியில் இருந்து காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரெயில் புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், கோவை-நாகர்கோவில் ரயில்(16322), வரும் 6-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை, திண்டுக்கல் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை-கச்சிக்குடா வாராந்திர சிறப்பு ரயில்(07192) இன்று(04.06.25)) மற்றும் 11-ம் தேதி, மதுரை ரயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்திற்கு பதிலாக, ஒரு மணி நேரம் தாமதமாக, அதாவது மதியம் 12 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வேயின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















