Stalin's Plan for Senthil Balaji: செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு - ஒர்க்அவுட் ஆகுமா தேர்தல் ஸ்கெட்ச்.?
2026 தேர்தலை மனதில் கொண்டு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை வைத்து மு.க. ஸ்டாலின் ஒரு கணக்கை போட்டுள்ளாராம். அது என்ன கணக்கு தெரியுமா.?

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை துறந்திருந்தாலும், கொங்கு மண்டலத்தில் அவரது செல்வாக்கை கணக்கில் வைத்து, தேர்தலுக்காக முக்கியமான பொறுப்பு ஒன்றை அவரிடம் கொடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக சொல்கின்றனர்.
2026 தேர்தலுக்காக ஸ்டாலின் தயாரி செய்த லிஸ்ட்
2026 சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து திமுகவில் வேலைகள் வேகமெடுத்துள்ளன. மாவட்ட வாரியாக கூட்டங்கள் நடத்தி குறைகளை கேட்பது, மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துவது என அடுத்தடுத்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தேர்தலுக்காக மண்டல அளவில் பொறுப்பாளர்களை நியமிப்பதற்கு ஸ்டாலின் லிஸ்ட் தயார் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கனிமொழி எம்பி, ஆ. ராசா எம்.பி ஆகியோர் அந்த லிஸ்ட்டில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மண்டல அளவில் கட்சியை பலமாக வைத்திருப்பது முக்கியம் என்பதால், மூத்த அமைச்சர்கள், ஒவ்வொரு மண்டலத்திலும் செல்வாக்காக இருப்பவர்கள், கட்சியில் ஆக்டிவாக இருப்பவர்கள், கட்சி நிர்வாகிகளுடனும் இணக்கமாக இருப்பவர்கள் என பார்த்துப் பார்த்து கணக்கு போட்டு அந்த லிஸ்ட் ரெடியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
கொங்குவில் செந்தில் பாலாஜியை வைத்து ஸ்கெட்ச்
அந்த வகையில், கொங்கு மண்டலத்தை செந்தில் பாலாஜியிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக சொல்கின்றனர். செந்தில் பாலாஜி மீதான வழக்கில் ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? என உச்சநீதிமன்றம் கறார் காட்டியதால், அவரை அமைச்சர் பதவியில் இருந்து இறக்கும் முடிவை எடுத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதனால், கொங்கு மண்டலத்தில் செல்வாக்கான நபராக வலம் வரும் செந்தில் பாலாஜியிடம் மண்டல பொறுப்பாளர் பதவியை கொடுத்து, கட்சியில் அவரது அதிகாரத்தை தக்க வைப்பதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. கொங்கு மண்டலத்தின் அசைவுகளை உன்னிப்பாக கவனித்து வரும் செந்தில் பாலாஜி கைகாட்டும் நபர்களுக்கே தேர்தலில் வாய்ப்பு கிடைத்து வருவதாக பேச்சு இருக்கிறது. இந்த தேர்தலிலும் கொங்கு மண்டலத்தின் செந்தில் பாலாஜி நிறைய கணக்குகளை போட்டு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பொன்முடிக்கு மு.க. ஸ்டாலின் கல்தா
அதே நேரத்தில், அமைச்சர் பதவியில் இருந்து இறக்கப்பட்ட பொன்முடிக்கு எந்த பதவியும் வழங்க ஸ்டாலின் ரெடியாக இல்லை என திமுக வட்டாரத்தில் சொல்கின்றனர். அவருக்கு பதிலாக அந்த தொகுதிகளின் தேர்தல் பொறுப்பை அமைச்சர் எ.வ. வேலு வசம் ஒப்படைக்கவிருப்பதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலினின் கணக்குப்படி, கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி சாதிப்பாரா.? பொறுத்திருந்து பார்க்கலாம்.





















