Mamata banerjee : ”கூட்டணியை விட்டு ஓடுனீங்களே! இப்போ எதுக்கு வர்றீங்க மம்தா?” விளாசும் ஆதிர் ரஞ்சன்
காங்கிரஸுடன் கூட்டணி வைக்க மறுத்து வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இறுதியில் பாஜகவுக்கு எதிராக அமைந்த எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இணைந்தார். மக்களவை தேர்தல் நேரத்தில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸுக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் மோதல் முற்றியது. மம்தா பானர்ஜியிடம் நாங்கள் பிச்சை கேட்கவில்லை, எங்களால் தனித்து போட்டியிட்டு கூட வெல்ல முடியும் என கூறி மோதலை பற்றவைத்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி. திரிணாமுல் காங்கிரஸ் பாஜகவின் பி டீம் என்றும், திரிணாமுல் கட்சிக்கு வாக்களிப்பது பாஜகவுக்கு வாக்களிப்பது போன்றது என்றும் விமர்சனங்களை அடுக்கினார்.
இரு கட்சியினருக்கும் வார்த்தை போர் முற்றிய நிலையில், இறுதியில் வங்கத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளிலும் தனித்து களமிறங்கினார் மம்தா. அவரது முடிவு இந்தியா கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என பேசப்பட்டது. சமீபத்தில் பிரச்சாரத்தில் பேசிய மம்தா பானர்ஜி, ‘மத்தியில் இந்தியா கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வருவேன், அதற்கு மேற்கு வங்கத்தில் இருந்து நாங்கள் உதவி செய்வோம். இந்தியா கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்” என சூளுரைத்தார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி அதிர் ரஞ்சன் சவுத்ரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘நான் அவரை நம்ப மாட்டேன். அவர் கூட்டணியில் இருந்து ஓடியவர். அதுமட்டுமல்லாமல் அவர் பாஜகவை நோக்கி செல்கிறார். காங்கிரஸ் கட்சியை அழிக்க வேண்டும் என்றும், 40 தொகுதிகளுக்கு மேல் தாண்ட மாட்டோம் என்றும் இத்தனை நாட்கள் பேசிக் கொண்டிருந்தார். இப்போது காங்கிரஸும் கூட்டணியில் ஆட்சிக்கு வரும் என்பதால் வெற்றி பற்றி தற்போது பேசுகிறார்” என விமர்சித்துள்ளார்.
அவரது கருத்து காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸூக்குள் மீண்டும் மோதலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லை என்பதையே இதுமாதிரியான சம்பவங்கள் காட்டுவதாக பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.