Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வன்னியர்கள் வாக்குகள் மட்டுமே வேண்டும் என்றும், அவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.

வன்னியர்கள் உள் ஒதுக்கீட்டை செயல்படுத்தாததை கண்டித்து விழுப்புரத்தில் இன்று அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அன்புமணி ராமதாஸ் பேசியதாவது,
வன்னியர்கள் ஒதுக்கீடு:
"உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கலாம் என்று தீர்ப்பளித்து 1208 நாட்கள் ஆகியும் ஆளுகின்ற திமுக அரசு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க மறுத்த ஸ்டாலின் அரசை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இந்த போராட்டத்திற்கு காரணம் தமிழ்நாட்டில் தனிப்பெரும் சமுதாயம் வன்னியர்கள். அதைவிட இந்த வன்னிய சமுதாயம் மிக மிக பின்தங்கிய சமுதாயமாக இருந்தும், இந்த சமுதாயத்தை முன்னேற்ற ஸ்டாலின் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைக்கண்டித்து முதற்கட்ட ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
ஸ்டாலினுக்கு வன்னியர்கள் வாக்கு தேவை:

ஸ்டாலினுக்கு வன்னியர்கள் வாக்கு மட்டும் வேண்டும். வன்னியர்கள் முன்னேறக்கூடாது. வன்னியர்கள் படிக்கக்கூடாது. வேலைக்கு போகக்கூடாது. சுயமரியாதையுடன் வாழக்கூடாது. வன்னியர்கள் ஸ்டாலினைப் பொறுத்தவரை வாக்கு வங்கிகள். மருத்துவர் ஐயா 45 ஆண்டுகளுக்கு முன்பு பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, சிதறிக்கிடந்த வன்னிய அமைப்புகளை எல்லாம் ஒன்றுதிரட்டி 1980 ஜுலை 20ம் நாள் வன்னிய சங்கத்தை நிறுவி மிகப்பெரிய மாநாட்டை நடத்தினார்.
அந்த மாநாட்டின் தீர்மானம் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு, பட்டியலின மக்களுக்கு கூடுதலாக 2 சதவீத இட ஒதுக்கீடு, வன்னியர்கள் போன்ற மற்ற சமுதாய மக்களுக்கு அவரவர் மக்கள்தொகைக்கு ஏற்ப இனப்பங்கீடு என்று 45 ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானத்தை போட்டார்.
45 ஆண்டுகால கோரிக்கை:
45 ஆண்டுகளாக நம்முடைய கோரிக்கையை இவர்கள் நிறைவேற்ற முடியவில்லை. ஒரு வாரம் சாலைமறியல் போராட்டத்தை ஐயா நடத்தினார். அதில் முதல் நாள் 21 தியாகிகளை நாம் இழந்தோம். அந்த 21 தியாகிகள் 15 பேர் இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள். இந்த மண்ணில்தான் அவர்கள் உயிர்நீத்தார்கள். அவர்கள் உயிர் நீத்ததற்கு என்ன அர்த்தம்? நீங்கள் படிக்கவும், வேலைக்கும் செல்ல வேண்டும் என்பதற்காக.
கல் உடைச்சுகிட்டு இருக்கோம். கஞ்சியோ, கூலோ குடிச்சுட்டு இருக்கோம். நாங்கள் எல்லாம் படிக்கக்கூடாது. கொத்தனார் வேலைக்கு போயிட்டு இருக்கோம். என் தம்பி, தங்கைககள் படிக்கக்கூடாதா? என் தம்பிகள், தங்கைகள் வேலைக்கு போகக்கூடாதா? சுயமரியாதையுடன் வாழக்கூடாதா? இன்னும் அடிமையாக இருக்க வேண்டுமா? இதை எல்லாம் முறியடிப்போம்.
சாதிவாரி கணக்கெடுப்பு தேவையா?

ஸ்டாலின் அவர்களே உடனடியாக வன்னியர்களுக்கு தனியாக இட ஒதுக்கீட்டை வழங்குங்கள் என்ற சட்டத்தை கொண்டு வாருங்கள். உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1208 நாட்கள் ஆகிறது. அந்த உச்சநீதிமன்ற தீர்ப்பிலே தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி நீங்கள் உள் ஒதுக்கீடு நடத்தி இட ஒதுக்கீட்டை கொடுங்கள் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை.
தமிழ்நாட்டிலே நீங்கள் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தேவையில்லை. இதை உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. இதற்கு மேல் என்ன வேண்டும்? உச்சநீதிமன்றம் ஒரு சாதிக்கு தனியாக ஒதுக்கீடு செய்யலாம் என்று தெளிவாக சொல்லியிருக்கிறது. தமிழ்நாடு அரசு வன்னியர்களுக்கு தனியாக ஒதுக்கீடு செய்யலாம் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் இருக்கிறது. வன்னியர்கள் ஒதுக்கீடு கொடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி தேவையில்லை என்று கூறியிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.





















