Bikes GST Hike: ப்ரீமியம் பைக் வாங்க பிளான் வச்சுருக்கீங்களா.? உடனே வாங்கிடுங்க - வரி 40% ஆகப் போகுது
ஜிஎஸ்டி 2.O-வின் கீழ் குறிப்பிட்ட சில பைக்குகளின் விலை உயரலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அது எந்தெந்த பைக்குகள் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

இந்தியாவில் அனைத்து விதமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கும் ஒரே வரியாக, சரக்கு மற்றும் சேவை வரி, அதாவது GST விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், GST வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வர பரிசீலனை செய்து வருவதாக சில வாரங்களுக்கு முன் தகவல் வெளியானது. இந்நிலையில், புதிய GST வரி விதிப்பின் கீழ் பைக் மற்றும் கார்களின் விலைகளில் மாற்றம் இருக்கலாம் என கூறப்பட்டது. அதன்படி, ப்ரீமியம் பைக்குகளின் ஜிஎஸ்டி 40 சதவீதமாக உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகி, ப்ரீமியம் பைக் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எந்தெந்த பைக்குகளின் விலை உயரும்.?
புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் பைக்குகளின் விலை குறையும் என கூறப்பட்டது. ஆனால், அனைத்து விதமான பைக்குகளின் விலையும் குறைக்கப்படாது என தற்போது தெரியவந்துள்ளது. இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் பைக்குகளுக்கு 28 சதவீதம் வரை GST வரி விதிக்கப்பட்டு வருகிறது.
350 சிசி-க்கும் குறைவான என்ஜின் கொண்ட பைக்குகளுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்படுகிறது. 350 சிசி-க்கும் மேலான என்ஜின் திறன் கொண்ட பைக்குகளுக்கு, 28 சதவீதம் ஜிஎஸ்டியுடன், 3 சதவீத செஸ் வரியும் சேர்த்து 31 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய GST வரி விதிப்பு முறையின் கீழ், சிறிய என்ஜின் கொண்ட பைக் தயாரிப்பாளர்களே அதிகம் பயனடைய உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், புதிய வரி விதிப்பு முறையின் கீழ், 350 சிசி-க்கும் குறைவான என்ஜின் கொண்ட பைக்குகள் மீதான வரி 28 சதவிதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படும் என தெரிகிறது. ஆனால், 350 சிசி அல்லது அதற்கும் மேலான என்ஜின் திறன் கொண்ட பைக்குகள் மீதான வரி 31 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.
பெரும்பாலான நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படாது என்றே தெரிகிறது. குறிப்பாக ஹீரோ, ஹோண்டா, பஜாஜ், டிவிஸ் மற்றும் ராயல் என்ஃபீல்டு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும், 350 சிசி-க்கும் கீழான என்ஜின் கொண்ட பைக்குகளையே அதிகம் விற்பனை செய்து வருகின்றன. எனவே, அந்த பைக்குளின் மீதான வரி குறையவே செய்யும்.
ராயல் என்ஃபீல்டின் 350 சிசி பைக்குகளிலும் 349 சிசி என்ஜினே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, அவற்றின் விலையும் குறையவே செய்யும். ஆனால், ஹிமாலயன், கொரில்லா, இன்டர்செப்டார் உள்ளிட்ட மற்ற ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை உயரும்.
அதேபோல் கேடிஎம் நிறுவனத்தின் 390 சீரிஸ் பைக்குகளின் விலையும் அதிகமாகும். பஜாஜுக்கு டாமினார் 400 மற்றும் பல்சர் NS400Z ஆகிய பைக்குகளின் விலை உயரக்கூடும். எனினும், 350 சிசி-க்கும் அதிகமான பைக்குகளின் விற்பனை கணிசமான அளவே இருக்கும். இதனால் பெரிய அளவில் விற்பனையில் பாதிப்பு ஏற்படாது. ட்ரையம்ப், ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட நிறுவனங்களின் சிறிய என்ஜின் கொண்ட பைக்குகளின் விலை புதிய வரி விதிப்பு முறையால் உயரக்கூடும்.
புதிய GST வரி விதிப்பு முறையானது மாநில நிதியமைச்சர்களால் சமீபத்தில் தான் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாத ஜிஎஸ்டி கூட்டத்தில் இந்த புதிய வரி விதிப்பு குறித்த முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. எனவே, அடுத்த மாதமே எந்தெந்த தயாரிப்புக்கு எவ்வளவு வரி குறைகிறது அல்லது கூடுகிறது என்பது குறித்த தகவல் கிடைத்துவிடும். தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாகவே புதிய வரி விதிப்பு முறை அமலுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















