பள்ளிக் கல்விக்கு இந்திய குடும்பங்கள் செலவழிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? ஆய்வில் வெளியான தகவல்!
இந்தியாவின் பள்ளிக் கல்வியின் முதுகெலும்பாக அரசுப் பள்ளிகள் விளங்குகின்றன. நாடு முழுவதும் மொத்த மாணவர் சேர்க்கையில் 55.9 சதவீதம் அரசுப் பள்ளிகளில் இருந்து வருகிறது.

அரசுப் பள்ளிகள் இந்தியக் கல்வி அமைப்பின் முதுகெலும்பாகத் திகழ்கின்றன என்று ஆய்வொன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய மாதிரி ஆய்வு (NSS) 80வது சுற்றின் ஒரு பகுதியாக கல்வி குறித்த விரிவான கணக்கெடுப்பு (CMS) நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 52,085 குடும்பங்கள் மற்றும் 57,742 மாணவர்கள் கலந்துகொண்டனர். மேலும் ஏப்ரல் மற்றும் ஜூன் 2025-க்கு இடையில் பள்ளிக் கல்விக்கான குடும்பச் செலவினங்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது. 2025-ல் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பின் சமீபத்திய விவரங்களில் கூறப்பட்டு உள்ளதாவது:
இந்தியாவின் பள்ளிக் கல்வியின் முதுகெலும்பாக அரசுப் பள்ளிகள் விளங்குகின்றன. நாடு முழுவதும் மொத்த மாணவர் சேர்க்கையில் 55.9 சதவீதம் அரசுப் பள்ளிகளில் இருந்து வருகிறது.
முக்கிய கண்டுபிடிப்புகள்:
- அரசுப் பள்ளிகளின் ஆதிக்கம்
கிராமப்புறங்களில் 66 சதவீத மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்கின்றனர். நகர்ப்புறங்களில் இந்த விகிதம் 30.1 ஆக உள்ளது. நாடு முழுவதும் அரசு உதவி பெறாத, தனியார் பள்ளிகள், தங்களின் மொத்த சேர்க்கையில் 31.9 சதவீதம் உள்ளன.
- குறைந்த கட்டணம்
அரசுப் பள்ளி மாணவர்களில் 26.7 சதவீதம் பேர் மட்டுமே கல்விக் கட்டணம் செலுத்துகின்றனர். தனியார் பள்ளிகளில் இந்த எண்ணிக்கை 95.7 சதவீதமாக உள்ளது.
- செலவின வேறுபாடுகள்
அரசுப் பள்ளிகளில் குடும்பங்கள் ஒரு மாணவருக்கு சராசரியாக ஆண்டுக்கு ரூ.2,863 செலவிடுகின்றன. தனியார் பள்ளிகளில் இந்தக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.25,002 ஆக உயர்கிறது. நாடு முழுவதும் ஒரு மாணவருக்கு சராசரியாக ரூ.7,111 கல்விக் கட்டணம் செலவிடப்படுகிறது.
- தனியார் பயிற்சி
27 சதவீத மாணவர்கள் தனியார் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கின்றனர். கிராமப்புறங்களை விட (25.5 சதவீதம்) நகர்ப்புறங்களில் (30.7 சதவீதம்) பயிற்சி வகுப்புகளில் சேரும் மாணவர்கள் அதிகம் உள்ளன. உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நகர்ப் புறங்களில் பயிற்சி செலவு ரூ.9,950 ஆகவும், கிராமப்புறங்களில் ரூ.4,548 ஆகவும் உள்ளது.
- நிதி ஆதாரங்கள்
95 சதவீத மாணவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை முதன்மை நிதி ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர். 1.2 சதவீதம் பேர் மட்டுமே அரசு உதவித்தொகையை முக்கிய ஆதரவு ஆதாரமாகக் குறிப்பிட்டனர்.
இந்த ஆய்வு இந்தியக் கல்வி அமைப்பில் அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தையும், குடும்பங்கள் கல்விக்காக செலவிடும் விதத்தையும் தெளிவாகக் காட்டுவதாக கல்வியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.






















