RSS Chief on Retirement: “75 வயதானால் ஓய்வு பெற வேண்டும் என்று நான் கூறவில்லை“ - ஆர்எஸ்எஸ் தலைவரின் அந்தர் பல்டி
பாஜக தலைவர் தேர்வில் ஆர்எஸ்எஸ்-ன் பங்கு உள்ளதாக கூறப்பட்டுவரும் நிலையில், அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத், அதற்கு மாறான கருத்தை கூறியுள்ளார். அவர் என்ன கூறினார் என்பது குறித்து பார்க்கலாம்.

பாஜகவின் தலைவர்களை தேர்ந்தெடுப்பதில், ஆர்எஸ்எஸ்-ன் பங்கு உண்டு என்பது நாடறிந்த விஷயமாகவே உள்ளது. ஆனால், பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பதில் தங்கள் பங்கு இல்லை என்றும், நான் ஓய்வு பெறுவேன் என்றோ, அல்லது வேறு யாராவது 75 வயதை எட்டும்போது ஓய்வு பெற் வேண்டும் என்றோ கூறவில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
“பாஜக தலைவரை நாங்கள் முடிவு செய்வதில்லை“
பாஜக கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா உள்ளார். இவர் இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக வேறு தலைவர் நியமிக்கப்பட வேண்டியது உள்ளது. அடுத்த தேசிய தலைவரை தேடும் பணியில் பாஜக மேலிடம் ஈடுபட்டு வருகிறது. பாஜக தேசிய தலைவர் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவராக இருப்பார். இதனால் பாஜக தலைவர் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முக்கிய பங்கு வகிக்கும். ஆர்எஸ்எஸ் கைக்காட்டும் நபர்தான் பாஜக-வின் தேசிய தலைவராவார் என்ற பார்வையும் உள்ளது.
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 3 நாள் விழா நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசும்போது கூறியதாவது:-
உங்களுடைய நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் ஏதும் சொல்லப் போவதில்லை (நகைச்சுவையாக). நாங்கள் முடிவு செய்வதில்லை. நாங்கள் முடிவு செய்வதாக இருந்தால், இவ்வளவு காலம் எடுத்திருக்கமாட்டோம். ஆர்எஸ்எஸ் அமைப்பை இயக்குவதில் நான் நிபுணர். அரசை இயக்குவதில் பாஜக நிபுணர். நாங்கள் ஒருவருக்கொருவர் கருத்துகளை மட்டுமே சொல்ல முடியும். எங்கேயும் மோதல் இல்லை. ஆனால், எல்லா பிரச்சனையிலும் ஒரே பக்கமாக இருக்கும் என்பது சாத்தியமற்றது. நாங்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் நம்புகிறோம் என்று கூறினார்.
“நான் யாரையும் ஓய்வு பெறுமாறு கூறவில்லை“
பிரதமருக்கு ஆறு நாட்களுக்கு முன்பு 75 வயதை எட்டும் பகவத், இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசியபோது, "நான் ஓய்வு பெறுவேன் என்றோ அல்லது வேறு யாராவது 75 வயதை எட்டும்போது ஓய்வு பெற வேண்டும் என்றோ நான் ஒருபோதும் கூறவில்லை..." என்று தெரிவித்தார்.
மேலும், "சங்கம் நமக்குச் சொல்வதை நாங்கள் செய்வோம்," என்று அவர் கூறினார். "சங்கத்தில், நாங்கள் ஸ்வயம்சேவகர்களாக இருக்கிறோம்... நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எங்களுக்கு வேலை வழங்கப்படுகிறது," என்று அவர் கூறினார், மேலும் "எனக்கு 80 வயதாக இருந்தாலும்" ஆர்எஸ்எஸ்-ஐ தொடர்ந்து நடத்துவேன் என்றும் அறிவித்தார். "எங்களுக்கு என்ன செய்யச் சொல்லப்படுகிறதோ அதை நாங்கள் செய்கிறோம்," என்று அவர் விளக்கமளித்தார்.
75 வயதை எட்டிய பிறகு, மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எந்த விதியும் இல்லை என்று பாஜக பலமுறை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.






















