கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளது. இது கல்வியாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்றது முதலே நாடு முழுவதும் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கல்வி என்பது தற்போது மிகப்பெரிய வர்த்தகமாக உருவெடுத்திருப்பதால் இந்தியாவில் 2000ம் ஆண்டுக்கு பிறகு தனியார் பள்ளிகள், கல்லூரிகளின் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல்:
இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் மூடப்பட்ட அரசுப்பள்ளிகளின் விவரங்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது, மத்திய கல்வித்துறை அமைச்சகம் 2014ம் ஆண்டு முதல் கடந்த 2024ம் ஆண்டு வரையிலான கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இந்தியா முழுவதும் 89 ஆயிரத்து 441 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இது கல்வியாளர்கள், பொதுமக்கள் என அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் அதிக பள்ளிகள் கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. ஏனென்றால், பரப்பளவிலும், மக்கள்தொகையிலும் அந்த மாநிலம் மிகப்பெரியது. வட இந்தியாவில் கல்வி எந்தளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு சான்றாக இந்த புள்ளிவிவரம் தற்போது அமைந்துள்ளது.
பரிதாப நிலையில் இந்தியா:
அதாவது, அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் மட்டும் பாஜக ஆட்சியில் 29 ஆயிரத்து 410 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 25 ஆயிரத்து 126 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. ஒடிசாவில் 10 ஆயிரத்து 26 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமில் 7 ஆயிரத்து 919 பள்ளிகள் மூடடப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தமட்டில் 5 ஆயிரத்து 527 பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.

காஷ்மீரைப் பொறுத்தமட்டில் 5 ஆயிரத்து 89 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. பீகாரைப் பொறுத்தமட்டில் 3 ஆயிரத்து 829 பள்ளிகளும், மகாராஷ்ட்ராவில் 2 ஆயிரத்து 560 பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. இந்த பள்ளிகள் எல்லாம் அரசுப்பள்ளிகள் ஆகும். உத்தரகாண்டில் 1552 பள்ளிகளும், பஞ்சாப்பை பொறுத்தவரையில் 1530 அரசுப்பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எத்தனை பள்ளிகள்?
இந்தியாவில் கல்வி வளர்ச்சியில் முன்னேறிய மாநிலமாக திகழும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 2014ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையிலான 239 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை கேரளாவில் 295 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. ஆனால், தெலங்கானா, கர்நாடகாவில் 500க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் 754 பள்ளிகளும், கர்நாடகாவில் 1180 பள்ளிகளும் அந்தந்த மாநில அரசுகளால் கடந்த 10 ஆண்டுகளில் மூடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது ஒட்டுமொத்த நாட்டிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்காலம் மீது கவலை:
அரசு மற்றும் பொதுமக்கள் இருதரப்பினரும் இதற்கு காரணம் என்றே கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏனென்றால், தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கவே தற்போது பெற்றோர்கள் அதிக அளவு ஆர்வம் காட்டுவதும், பல அரசுப்பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததும், போதிய உட்கட்டமைப்பு வசதி இல்லாததுமே இதற்கு காரணம் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 10 ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் பள்ளிகள் மூடப்பட்டிருப்பது அரசுப்பள்ளிகளின் எதிர்காலம் மீது மிகுந்த கவலையை உண்டாக்கியுள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து இந்த துயரத்திற்கு விரைவில் முடிவுகட்ட வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.





















