Parliament Monsoon Session: மழைக்கால கூட்ட தொடர் - அரசின் 8 மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் ட்ரம்ப், ஏர் இந்தியா ஸ்கெட்ச்
Parliament Monsoon Session: பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

Parliament Monsoon Session: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 8 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்:
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, வரும் ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி வரை என, ஒரு மாத காலம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரில் 8 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அவை பெரும்பாலும் பொருளாதாரம் மற்றும் நிர்வாக ரீதியிலான மசோதாக்களாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வருமான வரி 2025 மசோதா கவனத்தை ஈர்த்துள்ளது.
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, பிப்ரவரி 13 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரி மசோதா, பாஜக எம்பி பைஜயந்த் ஜெய் பாண்டா தலைமையிலான நாடாளுமன்ற தேர்வுக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெற்றதும் நடப்பு அமர்வில் நிறைவேற்றப்பட உள்ளது.
தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாக்கள்:
மணிப்பூரின் மாநில ஜிஎஸ்டி சட்டத்தை தேசிய ஜிஎஸ்டி கட்டமைப்புடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்ட, மணிப்பூர் சரக்கு மற்றும் சேவை வரி (திருத்தம்) மசோதா 2025 தாக்கல் செய்யப்படலாம். அதோடு, அம்மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை நீட்டிக்கும் மசோதாவையும் நாடாளுமன்றம் பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசு தலைவர் ஆட்சிக்கு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் குடியரசு மறு அனுமதி தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது. அதன்படி, புதியதாக 8 மசோதாக்கள் மற்றும் கடந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டு நிலுவையில் உள்ள 7 மசோதாக்கள் என மொத்தம் 15 மசோதாக்கல் விவாதிக்கப்பட உள்ளன.
- சரக்கு ஏற்றிச் செல்லும் மசோதா, 2024
- கடல் மூலம் பொருட்களை எடுத்துச் செல்லும் மசோதா
- கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா, 2024
- கோவா சட்டமன்றத் தொகுதிகளில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் பிரதிநிதித்துவ மசோதா, 2024
- வணிகக் கப்பல் மசோதா, 2024
- இந்திய துறைமுக மசோதா, 2025
- வருமான வரி மசோதா, 2025
- மணிப்பூர் ஜிஎஸ்டி (திருத்தம்) மசோதா, 2025
- ஜன் விஸ்வாஸ் (விதிகள் திருத்தம்) மசோதா, 2025
- இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (திருத்தம்) மசோதா, 2025
- வரிவிதிப்புச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2025
- புவி பாரம்பரிய தளங்கள் மற்றும் புவி நினைவுச்சின்னங்கள் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) மசோதா, 2025
- சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2025
- தேசிய விளையாட்டு ஆளுகை மசோதா, 2025
- தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு திருத்த மசோதா, 2025
முழு வீச்சில் எதிர்க்கட்சிகள்:
மறுமுனையில் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தீவிரம்காட்டி வருகிறது. அதன்படி,
- பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதன் பின்விளைவுகள்
- மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை முடிவுகள்
- பீகாரில் வாக்குரிமைக்கு அச்சுறுத்தலாக அவசரகதியில் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தம்
- இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதலுக்கு மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் மீண்டும் குறிப்பிடுவது
- ட்ரம்பின் கருத்து குறித்து அரசாங்கம் "மௌனம் காப்பதும்"
- தொகுதி மறுசீரமைப்பு
- காசாவில் நிகழும் "அட்டூழியங்கள்"
- அகமதாபாத் விமான விபத்து
- ஜம்மு காஷ்மீரில் நடந்ததாகக் கூறப்படும் உளவுத்துறை தோல்விகள்
- ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான அவசரத் தேவை
உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால், மழைக்கால கூட்டத்தொடர் தீவிரமான விவாதங்கள் மற்றும் அரசியல் மோதல்களால் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















