Automobile: ஆஃபர் வரட்டும் சார்.. கார் வாங்குவதை ஹோல்டில் போட்ட மக்கள், ரூ.1 லட்சம் சேமிக்கலாம்னா சும்மாவா?
Automobile GST Reform: திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரியை எதிர்பார்த்து பொதுமக்கள் பலரும் தங்களது கார் வாங்கும் முடிவை, நிறுத்தி வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Automobile GST Reform: திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி மூலம், கார்கள் மீது அதிகபட்சமாக 60 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடியும் என கூறப்படுகிறது.
கார் முன்பதிவு மந்தம்..
ஜிஎஸ்டி வரிச்சுமையை குறைக்கும் விதமாக தற்போதுள்ள நான்கு அடுக்குகளை, இரண்டாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் தசரா பண்டிகையை ஒட்டி புதிய நடைமுறை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக புதிய காரை வாங்க திட்டமிட்டிருந்த பலரும், தங்களது முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விற்பனை நிலையங்களை அணுகி காரின் விவரங்கள் மற்றும் விலை தொடர்பாக ஏராளமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டாலும், முன்பதிவு என்பது கடும் வீழ்ச்சி கண்டுள்ளதாக ஆட்டோமொபைல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜிஎஸ்டி மறுசீரமைப்பால் வரி விகிதம் குறைந்து தற்போதைய விலையை கட்டிலும் மலிவு விலையில் கார்கள் கிடைக்கும் என்பதால் மக்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
ரூ.60,000 வரை சேமிக்கலாம்..
ஜிஎஸ்டி வரி திருத்தத்தால் சிறிய கார்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் மீதான, ஜிஎஸ்டி வரியானது 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக குறைய வாய்ப்புள்ளது. குறிப்பாக எஸ்யுவிக்கள் மீதான 45 சதவிகித வரியானது 40 சதவிகிதமாக மாறக்கூடும். இதன் காரணமாக, மாருதியின் பிரபலமான மலிவு விலை கார்களான வேகன் ஆர் மற்றும் பலேனோ மட்டுமின்றி, பிரபல எஸ்யுவிக்களான ஜுண்டாய் க்ரேட்டா மற்றும் மஹிந்த்ரா ஸ்கார்ப்பியோ என் கார் மாடல்களும் மலிவானவையாக மாறக்கூடும். புதிய ஜிஎஸ்டி மாற்றங்களானது பயனர்களுக்கு ஆரோக்கியமான விலை குறைப்பிற்கும், மாதாந்திர தவணையில் 60 ஆயிரம் ரூபாய் வரையில் சேமிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது.
ரூ.1 லட்சம் வரை விலை குறையும்..
கார்களின் மீதான விலை மாற்றமானது சிறிய கார்கள் மட்டுமின்றி ஹேட்ச்பேக் வரையிலும் நீளக்கூடும். குறிப்பாக சில எஸ்யுவி கார்களின் விலையானது ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திருத்தப்பட்ட ஜிஎஸ்டி தொடர்பு அறிவிப்பு வெளியானதும் கார் முன்பதிவுகள் மீண்டும் வேகமெடுக்கும் என நம்பப்படுகிறது. அதேநேரம், தற்போது ஏற்பட்டுள்ள தொய்வானது டீலர்களை கலக்கமடைய செய்துள்ளது.
பண்டிகை கால சலுகைகள் ஆன் தி வே..
முன்பதிவில் ஏற்பட்டுள்ள தொய்வால் ஆட்டோமொபைல் துறைக்கு பண்டிகைக் கால உற்சாகம் இப்போதைக்கு ஒரு மோசமான தொடக்கமாக இருக்கலாம். ஆனால் கார் தயாரிப்பாளர்கள் அதை ஈடுசெய்ய தள்ளுபடிகளைக் கொண்டு வந்து வாங்குபவர்களை ஈர்க்கலாம் என கூறப்படுகிறது. செப்டம்பர் முதல் வாரத்தில் டெல்லியில் நடைபெற போகும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் புதிய வரி அடுக்குகள் இறுதி செய்யப்பட உள்ளன. இது ஆட்டோமொபைல் துறையை உற்சாகப்படுத்துவதோடு, வாங்குபவர்களின் மனநிலையை நேர்மறையாக தூண்டக்கூடும். எனவே, கார் முன்பதிவில் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டு இருந்தாலும், மத்திய அரசின் அறிவிப்பிற்குப் பிறகு மிகப்பெரிய எழுச்சி எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் கார் மற்றும் பைக்குகளின் விற்பனை தற்போது இருப்பதை காட்டிலும், மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.






















