AI Job Cuts: ஏஐ மூலம் இவர்களுக்குத்தான் அதிக வேலை இழப்பு; அதிர்ச்சி தரும் ஸ்டான்ஃபோர்டு ஆய்வு முடிவுகள்!
ஏஐயால் 2022ஆம் ஆண்டு முதல், இந்தத் துறையில் ஆரம்ப நிலை வேலைவாய்ப்புகள் 20% வரை குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவால், இளைஞர்களின், முதல்கட்ட வேலைவாய்ப்புகளுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.து.
உலகெங்கிலும் உள்ள பல்வேறு துறைகளில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி ஒருபுறம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், மறுபுறம் வேலைவாய்ப்புகளின் எதிர்காலம் குறித்த ஐயங்களை உருவாக்கி உள்ளது.
வேலைவாய்ப்புகளில் 13% சரிவு
உலகப் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில், ஏஐ காரணமாக 22-25 வயதுடைய இளம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளில் 13% சரிவு ஏற்பட்டுள்ளதாகக் காட்டுகிறது. குறிப்பாக, ஏஐ தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்தப்படும் துறைகளில் இந்த சரிவு அதிகமாக இருப்பதாக ஆய்வு குறிப்பிடுகிறது.
ஐ.டி. எனப்படும் மென்பொருள் மேம்பாட்டுத் துறை, செயற்கை நுண்ணறிவால் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றாகும். 2022ஆம் ஆண்டு முதல், இந்தத் துறையில் ஆரம்ப நிலை வேலைவாய்ப்புகள் 20% வரை குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறியீட்டு முறைகளைத் தானியங்குபடுத்துவது, பிழைகளைக் கண்டறிவது மற்றும் குறைந்த நேரத்தில் சிக்கலான பணிகளைச் செய்வது போன்ற பணிகளை ஏஐ தொழில்நுட்பம் வேகமாகவும் திறமையாகவும் செய்வதால், மனித வளத்திற்கான தேவை குறைந்துள்ளதாகவும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது.

மனித குலம் என்ன செய்ய வேண்டும்?
இதுகுறித்து ஸ்டான்போர்டு ஆய்வுக் குழுவின் தலைவர் அனிதா ஷர்மா கூறும்போது, "செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, நமக்கு ஒரு புதிய சவாலாக உள்ளது. மனித குலம் இந்தத் தொழில்நுட்பத்துடன் இணைந்து வாழும் வழியை விரைவில் கண்டறிய வேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வு முடிவுகள், மனிதர்களின் வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்த கவலைகளை ஏற்படுத்தி உள்ளன. இதனால், ஏஐ வேலைவாய்ப்புகளைப் பறிக்கிறதா அல்லது மனிதர்களுக்கு மேலும் திறமையான பணிகளைச் செய்ய கட்டாயப்படுத்துகிறதா என்ற கேள்வி எல்லோரிடமும் எழுந்துள்ளது.





















