Novak Djokovic : தோல்வியால் பின் தங்கினாரா..? நேஷனல் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகிய நோவக் ஜோகோவிச்.. காரணம் என்ன ?
சோர்வு காரணமாக நேஷனல் பேங்க் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஜோகோவிச் விலகுவதாக கூறியுள்ளார்
ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி நேஷனல் பேங்க் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி கனடாவில் உள்ள டோராண்டோ நகரில் நடக்க உள்ளது. இந்த போட்டி 3 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 21 ஆம் தேதி அமெரிக்கா ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதுவும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. தற்போது நடக்கவிருக்கும் நேஷனல் பேங்க் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டிக்கான முன்னோட்டமே என்பதில் சந்தேகம் இல்லை.
சோர்வு காரணமாக விலகும் ஜோகோவிச்
இந்த நேஷனல் பேங்க் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 2வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சோர்வு காரணமாக தொடரில் இருந்து வெளியேறுவதாக கூறியுள்ளார். 36 வயதான நோவக் ஜோகோவிச் சமீபத்தில் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் இறுதி சுற்றியில் ’நம்பர் 1” வீரரான கார்லஸ் அல்காரஸ்சிடம் (ஸ்பெயின்) 5 செட்வரை போராடி வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
விலகல் குறித்து ஜோகோவிச் கூறியது
” நான் எப்போதும் கனடாவில் மிகவும் அனுபவித்து விளையாடி இருக்கிறேன். எனது அணியுடன் கலந்து ஆலோசித்த பிறகுதான் விலகல் முடிவை எடுத்தது சரி என்று நினைக்கிறேன். வரும் ஆண்டுகளில் கனடா போட்டிக்கு திருப்பி வந்து அங்குள்ள சிறந்த ரசிகர்கள் முன்னிலையில் விளையாட முடியும் என்று நம்புகிறேன்” என்று விலகல் குறித்து ஜோகோவிச் கூறினார்.
கிறிஸ்டோபர் வாய்ப்பு
இந்த தொடரில் 4 முறை பட்டம் வென்ற ஜோகோவிச் விலகியதால், அமெரிக்க வீரர் கிறிஸ்டோபர் எபாங்க்ஸ்க்கு பிரதான சுற்றில் நேரடியாக களம் இறங்க வாய்ப்பு உருவாகியுள்ளது. எபாங்ஸ், விம்பிள்டன் டென்னிசில் சிட்சிபாஸ் கேமரூன் நோரி ஆகியோரை வீழ்த்தி காலிறுதி வரை முன்னேறியவர் ஆவார்