Xiaomi YU7: 72 மணி நேரத்தில் 3 லட்சம் பேர் முன்பதிவு - என்னயா கார் இது? ஈயாய் மொய்த்த கூட்டம், 62 வாரங்களா?
Xiaomi YU7: ஷாவ்மி நிறுவனத்தின் புதிய YU7 கார் மாடலை 72 மணி நேரத்தில் 3 லட்சம் பேர் முன்பதிவு செய்து ஆச்சரியம் அளித்துள்ளனர்.

Xiaomi YU7: ஷாவ்மி நிறுவனத்தின் புதிய YU7 கார் மாடலின் டெலிவெரிக்கான காத்திருப்பு காலம் 62 வாரங்களாக உயர்ந்துள்ளது.
ஷாவ்மி YU7:
முன்பதிவு தொடங்கிய அடுத்த நொடியே, பலாப்பழத்தின் மீது மொய்க்கும் ஈக்களை போன்று ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்துள்ளனர். முதல் 72 மணி நேரத்திலேயே, இந்த புதிய மின்சார எஸ்யுவி ஆனது வரலாற்றில் பதிக்கும் அளவிலான முன்பதிவை பெற்றுள்ளது. ஸ்டைலான லுக், தொழில்நுட்ப அம்சங்கள், கவனத்தை ஈர்கக் கூடிய பிராண்ட் ஆகிய அம்சங்களால், ஷாவ்மியின் YU7 கார் நடப்பாண்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த காருக்கான தேவை வானளவு உயர்ந்துள்ள நிலையில், அதன் டெலிவெரிக்கான காத்திருப்பு காலம் ராக்கெட் வேகத்தில் எகிறியுள்ளது.
ஷாவ்மி YU7 - 3 லட்சம் முன்பதிவுகள்
ஷாவ்மி நிறுவனத்தின் YU7 மின்சார கிராஸ் ஓவர் கார் மாடலின் விற்பனை கடந்த 6ம் தேதி சீனாவில் தொடங்கியது. அதிலிருந்து முதல் 72 மணி நேரத்திலேயே 3 லட்சம் முன்பதிவுகள் குவிந்துள்ளன. இது காரின் மீது வாடிக்கையாளர்களுக்கு உள்ள மிகப்பெரும் எதிர்பார்ப்பை உணர்த்துகிறது. முன்னதாக, கடந்த ஜுன் 26ம் தேதி முன்பதிவு தொடங்கியபோதும், 18 மணி நேரத்திலேயே 2 லட்சத்து 40 ஆயிரம் கார்கள் முன்பதிவு செய்யப்பட்டன. மூன்றாவது நாளில் இந்த எண்ணிக்கையானது 2 லட்சத்து 80 ஆயிரத்து 800-லிருந்து 3 லட்சத்து 15 ஆயிரத்து 900 யூனிட்களாக எகிறியது. இந்த விவரங்களானது, மின்சார வாகன பிரிவில் இந்த வாகனமானது எந்த அளவிற்கு கவனத்தை ஈர்த்துள்ளது என்பதை உணர்த்துகிறது.
ஷாவ்மி YU7 - கிடுகிடுவென உயர்ந்த காத்திருப்பு காலம்:
ஷாவ்மி நிறுவனத்தின் YU7 கார் மாடலின் தேவை கிடுகிடுவென உயர்ந்த நிலையில், அதற்கான காத்திருப்பு காலம் 45 வாரங்களிலிருந்து 62 வாரங்களாக உயர்ந்துள்ளது. அதாவது சிலருக்கு காரை முன்பதிவு செய்த ஓராண்டிற்கு பிறகே டெலிவெரி மேற்கொள்ளப்படும். காருக்கான முன்பதிவு தொடங்கிய முதல் சில நிமிடங்களிலேயே ஆர்டர் செய்த ஃபர்ஸ்ட் பேட்ச் பயனாளர்களுக்கு கடந்த 6ம் தேதி வாகனம் விநியோகம் செய்யப்பட்டதாக ஷாவ்மி தெரிவித்துள்ளது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணமாக 20 ஆயிரம் யுவான்கள் அதவாது இந்திய மதிப்பில் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஷாவ்மி YU7 - வசதிகள்
அட்டகாசமான வடிவமைப்புடன் 4999 மில்லி மீட்டர் நீளம், 1996 மில்லி மீட்டர் அகலம் மற்றும் 1608 மில்லி மீட்டர் உயரத்துடன், ஷாவ்மியின் YU7 காரானது மிகப்பெரிய கிராஸ் ஓவராக காட்சியளிக்கிறது. கூடுதல் இடவசதி மற்றும் சொகுசாக அமர்வதற்கான இருக்கைகள் உறுதி செய்யப்படுகின்றன. உயர்தொழிநுட்ப அம்சங்களுடன், 5 பேர் அமரும் வகையிலான கட்டமைப்பை பெற்றுள்ளது. 16.1 இன்ச் ஸ்க்ரீன் செண்டர் கன்சோல், இரண்டு 80 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் பேட்ஸ், விண்ட்ஷீல்டிற்கு கீழே இனோவேடிவ் 1.1 மீட்டர் ஹைபர்விஷியன் ஸ்க்ரீன் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஷாவ்மி YU7 - பாதுகாப்பு அம்சங்கள்
சீனாவின் உள்நாட்டு பாதுகாப்பு பரிசோதனையில் இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. ஹைப்ரிட் ஸ்டீல் அலுமியம் மூலம் கட்டமைக்கப்பட்டு வலுவாக உருவாகியுள்ளது. ADAS தொழில்நுட்பம், ஏர் பேக்குகள், ரியர் சீட் பெல்ட்ஸ்,பவர் டோர் லாக்ஸ் மற்றும் எமர்ஜென்சி பிரேக்கிங் என பல பாதுகாப்பு அம்சங்களையும் பெற்றுள்ளன.
ஷாவ்மி YU7 - பேட்டரி விவரங்கள்
ஷாவ்மி YU7 காரின் அடிப்படைவேரியண்டானது சிங்கிள் ரியர் ஆக்சில் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இது 315hp மற்றும் 528Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இந்த மோட்டாருடன் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 830 கிலோ மீட்டர் ரேஞ்ச் வழங்கக் கூடிய 96.2KWh பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 5.88 விநாடிகளில் இந்த கார் எட்டும் என கூறப்படுகிறது. ப்ரோ AWD வேரியண்டானது ஒட்டுமொத்தமாக 489hp ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இரட்டை மோட்டாரை கொண்டுள்ளது. ஆற்றல் உயர்ந்தாலும், அதே 96.2KWh பேட்டரி மூலம் 770 கிலோ மீட்டர் ரேஞ்சையே இந்த டாப் எண்ட் கார் வழங்குகிறது. டாப் எண்ட் வேரியண்டானது 101.7KWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது.
ஷாவ்மி YU7 - விலை, இந்தியா வெளியீடு
சீனாவைச் சேர்ந்த செல்போன் நிறுவனமான ஷாவ்மி தற்போது மின்சார கார் சந்தையிலும் தடம் பதித்து கவனத்தை ஈர்த்துள்ளது. அதன் புதிய YU7 காரானது ஸ்டேண்டர்ட்,மிட் மற்றும் டாப் எண்ட் என மொத்தம் 3 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 31 லட்சத்தில் தொடங்கி சுமார் 40 லட்சம் வரை நீடிக்கிறது. இந்த காரை இந்திய சந்தையில் காட்சிப்படுத்தினாலும், உள்நாட்டில் விற்பனைக்கு கொண்டு வரும் எண்ணம் தற்போது வரை ஷாவ்மி நிறுவனத்திற்கு இல்லை என கூறப்படுகிறது. முதலில் சீன சந்தையில் கவனம் செலுத்திய பிறகே, சர்வதேச சந்தையை நோக்கிய தங்களது பயணம் இருக்கும் என்றும் ஷாவ்மி நிறுவனம் தெரிவித்துள்ளது.





















