Shikhar Dhawan Divorce: ஆயிஷாவிடம் இருந்து விவாகரத்து பெற்றார் ஷிகர் தவான்.. அப்போ! குழந்தை யாரிடம் வளரும்..?
ஷிகர் தவான் விவாகரத்து மனுவில், மனைவி தன்னை மனரீதியாக சித்திரவதை செய்ததாக கூறியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளும் உண்மை என குடும்பநல நீதிமன்ற நீதிபதி ஹரிஷ்குமார் ஏற்றுக்கொண்டார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கும், ஆயிஷா முகர்ஜிக்கும் டெல்லி குடும்பநல நீதிமன்றம் நேற்று விவாகரத்து வழங்கியது. அதில், ஆயிஷா ஷிகர் தவானை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. சில முக்கிய காரணங்களுக்காக நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது. இதில் மிகப் பெரிய விஷயம் என்னவென்றால், ஆயிஷா தனது ஒரே மகனைப் பிரிந்து பல ஆண்டுகளாக வாழ வற்புறுத்தியதன் மூலம் தவானுக்கு மன வேதனையை ஏற்படுத்தியதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
ஷிகர் தவான் விவாகரத்து மனுவில், மனைவி தன்னை மனரீதியாக சித்திரவதை செய்ததாக கூறியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளும் உண்மை என குடும்பநல நீதிமன்ற நீதிபதி ஹரிஷ்குமார் ஏற்றுக்கொண்டார்.
குழந்தை யாரிடம் வளரும்..?
தவான் மற்றும் ஆயிஷாவின் மகன் ஜோராவர் யாருடன் இருக்க வேண்டும் என்பது குறித்து நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இருப்பினும், தவானுக்கு அவரது மகனைச் சந்திக்கவும் வீடியோ அழைப்பில் பேசவும் நீதிமன்றம் உரிமை இருக்கிறது என்று தெரிவித்தது. தவான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் பள்ளி விடுமுறையில் பாதியையாவது செலவிட ஜோரவருக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், ஷிகர் தவான், குடிமகன் மற்றும் பொறுப்பான தந்தை என்ற முறையில், தனது மகனைச் சந்திக்கவும், அவருடன் சிறிது காலம் தங்கவும் உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் கூறியது.
என்ன மன உளைச்சலுக்கு ஆளானார் ஷிகர் தவான்..?
ஆயிஷா தன்னுடன் இந்தியா வந்து தங்குவதாக முதலில் உறுதியளித்தார். பின்னர், அவரது முன்னாள் கணவர் விவகாரம் தொடர்பாக தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கி, என்னிடம் இருந்து என் மகனை ஓராண்டுக்கு மேலாக பிரித்து வைத்திருந்தார் என ஷிகர் தவான் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர்கள் மற்றும் சக வீரர்களுக்கு தரக்குறைவான செய்திகளை அனுப்பியதாக ஆயிஷா தவான் மீதான குற்றச்சாட்டும் உண்மை என கண்டறியப்பட்டது.
மூன்று பேருக்கு மட்டுமே இதுபோன்ற செய்திகளை அனுப்பியதாக ஆயிஷா கூறியிருந்தாலும், அதை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. கொரோனா காலக்கட்டத்தில் ஆயிஷா தனது தந்தையுடன் தங்க விரும்புவதாக கூறி நிறைய சண்டையிட்டார் என்ற ஷிகர் தவானின் குற்றச்சாட்டு உண்மை என்று நீதிமன்றம் கண்டறிந்தது.
ஆயிஷா தனது மகனுடன் இந்தியாவில் வசிக்க வந்தபோது, தவானை தனது இரண்டு மகள்களுக்கும் மாதாந்திர செலவுகளை அனுப்பும்படி வற்புறுத்தியதாகவும், அவர்களுடைய பள்ளிக் கட்டணத்தைக் கூட தவானே செலுத்த வேண்டியிருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீண்ட நாட்களாக தவான் அவருக்கு மாதந்தோறும் சுமார் ரூ.10 லட்சம் அனுப்பியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள தவானின் மூன்று சொத்துக்களில் 99% உரிமையை ஆயிஷா பலத்த அழுத்தத்தின் மூலம் தனது பெயரில் மாற்றியுள்ளார் என்றும், மேலும் இரண்டு சொத்துக்களின் கூட்டு உரிமையாளராகவும் வற்புறுத்தி தன் பெயரை இணைத்து கொண்டதாகவும் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
யார் இந்த ஆயிஷா..?
ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற ஆயிஷா இந்தியாவில் பிறந்தவர். அவரது தந்தை இந்தியர் மற்றும் அவரது தாயார் பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர். ஷிகரை விட 10 வயது மூத்தவரான ஆயிஷா, ஒரு கிக் பாக்ஸர் ஆவார்.
ஆயிஷாவின் முதல் திருமணம் ஆஸ்திரேலிய தொழிலதிபருடன் நடந்தது. இந்த திருமணத்திற்குப் பிறகு ஆயிஷாவுக்கு ஆலியா, ரியா என இரண்டு மகள்கள் பிறந்தனர்.
முன்னாள் கணவரை விவாகரத்து செய்துகொண்ட ஆயிஷா, கடந்த 2012 ம் ஆண்டு ஷிகர் தவானை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, ஷிகர் தவான் ஆயிஷாவின் மகள்களை தத்தெடுத்தார். தொடர்ந்து, ஆயிஷா மற்றும் ஷிகர் தவானுக்கு பிறந்த குழந்தைதான் ஜோராவர்.
இருவருக்கும் காதல் எப்படி மலர்ந்தது..?
ஹர்பஜன் சிங்கின் ஃபேஸ்புக் நண்பர் பட்டியலில் ஷிகர் தவான் ஆயிஷாவை முதல்முறையாக பார்த்தார். ஆயிஷாவின் படத்தை பார்த்தவுடனேயே காதல் வயப்பட்டார். இதற்குப் பிறகு ஷிகர் ஆயிஷாவுடன் பேச தொடங்கி காதலை வளர்த்துள்ளார்.
ஷிகர் தவானின் குடும்ப உறுப்பினர்கள் ஆயிஷாவுடனான திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தன்னை விட 10 வயது மூத்த மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற விவாகரத்து பெற்ற பெண்ணை திருமணம் செய்து கொள்வதை அவர்கள் விரும்பவில்லை. எனினும் பின்னர் அவர்கள் ஒப்புக்கொண்டார். 2012ல் சீக்கிய முறைப்படி திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் விராட் கோலி உட்பட கிரிக்கெட் வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2021 ஆம் ஆண்டில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானும் அவரது மனைவி ஆயிஷா முகர்ஜியும் திருமணமான 9 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்தனர்.