IND vs ENG 3rd Test: கிரிக்கெட்டின் மெக்கா என்று லார்ட்ஸ் மைதானத்தை அழைப்பது ஏன்? இத்தனை சிறப்புகளா!
IND vs ENG 3rd Test: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் நடக்கும் லார்ட்ஸ் மைதானத்தை ரசிகர்கள் கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கின்றனர்.

உலகப்புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி நாளை மோதுகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் ஆடுவதற்கு அதுவும் டெஸ்ட் கிரிக்கெட் ஆட வேண்டும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவாகும். அந்த லார்ட்ஸ் மைதானத்தில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? என்று கீழே காணலாம்.
கிரிக்கெட்டின் மெக்கா:
கிரிக்கெட்டின் மெக்கா என்று இந்த லார்ட்ஸ் மைதானத்தை அழைக்கின்றனர். இங்கிலாந்தில்தான் கிரிக்கெட் பிறந்தது என்று கூறுவதற்கு காரணமும் இந்த லார்ட்ஸ் மைதானமே ஆகும். லார்ட்ஸ் மைதானம்தான் உலகின் முதல் கிரிக்கெட் மைதானம் ஆகும். ஆனால், லார்ட்ஸ் மைதானம் முதன்முதலில் உருவானது தற்போது இருக்கும் இடத்தில் அல்ல.
லார்ட்ஸ் மைதானம் உருவானது எப்படி?
தாமஸ் லார்ட் என்பவரால் கடந்த 1787ம் ஆண்டு இங்கிலாந்தின் லண்டனில் உள்ள தென்கிழக்கில் உள்ள ரீஜண்ட் பார்க்கில் உள்ள செயின்ட் மெர்ல்போனில்தான் முதன்முதலில் லார்ட்ஸ் மைதானம் உருவானது. பின்னர், 1811ம் ஆண்டு இந்த மைதானம் மாற்றப்பட்டது. செயின்ட் ஜான்ஸ் உட் எஸ்டேட்டிற்கு மாற்றப்பட்டது. அங்கு 1814ம் ஆண்டு வரை மைதானம் செயல்பட்டு வந்தது.

அதன்பின்னர், 1814ம் ஆண்டுக்கு பிறகுதான் தற்போது கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் லார்ட்ஸ் மைதானம் உருவானது. முதன்முதலில் இந்த மைதானத்தை உருவாக்கியவர் நினைவாகவே இந்த மைதானத்திற்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது.
200 ஆண்டுகள் பழமை:
200 ஆண்டுகள் பழமையான இந்த லார்ட்ஸ் மைதானம் ஏராளமான பழமைகளையும், பெருமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 2005ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமையகம் துபாய்க்கு மாற்றப்படுவதற்கு முன்பு வரை, ஐசிசி-யின் தலைமையகம் இதே லார்ட்ஸில்தான் செயல்பட்டு வந்தது.
ஜாம்பவான்கள்:

உலகப்புகழ்பெற்ற இந்த லார்ட்ஸ் மைதானம்தான் மெர்ல்போன் கிரிக்கெட் கிளப் அணியின் சொந்த மைதானமாக திகழ்கிறது. இந்த மைதானத்தில் பிராட்மேன், விவ் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், ப்ரையன் லாரா, முரளிதரன், ஷேன் வார்னே, கும்ப்ளே, ராகுல் டிராவிட், விராட் கோலி, ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன் என புகழ்பெற்ற ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட் ஆடியுள்ளனர். இந்திய அணி முதன்முதலில் உலகக்கோப்பையை வென்றது இதே லார்ட்ஸ் மைதானத்தில்தான் என்பது இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய பெருமை.

இதே லார்ட்ஸ் மைதானத்தில் 1975, 1979, 1983, 1999 மற்றும் 2019ம் ஆண்டு ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. மேலும், 1993ம் ஆண்டு மற்றும் 2017ம் ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளும் நடந்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டின் பழமையான அருங்காட்சியகமும் இதே லார்ட்ஸ் மைதானத்தில்தான் உள்ளது.
விக்டோரியன் பெவிலியன்:
லார்ட்ஸ் மைதானத்திற்கு அழகு சேர்க்கும் அந்த விக்டோரியன் ஸ்டைல் பெவிலியனை 1899-1890ம் ஆண்டுகளில் புகழ்பெற்ற பொறியாளர் தாமஸ் வெரிட்டி வடிவமைத்து கட்டினார். ஏனென்றால், தற்போதுள்ள லார்ட்ஸ் மைதானத்தில் 1825ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது, பின்னர், 1889ம் ஆண்டும் சேதம் ஏற்பட்டது.
புகழ்பெற்ற இந்த லார்ட்ஸ் மைதானத்தில் மணி அடித்து ஆட்டத்தை தொடங்கி வைப்பது இன்றளவும் வழக்கமாக உள்ளது. 200 ஆண்டுகள் பழமையான இந்த மைதானத்தில் 31 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை காணலாம். லண்டன்வாசிகள் லார்ட்ஸ் மைதானத்தில் அமர்ந்து டெஸ்ட் போட்டிகள் பார்ப்பதை கவுரவமாக கருதுகின்றனர்.




















