Paris Olympics 2024: களைகட்டும் ஒலிம்பிக்! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 7 தகவல்கள் - இதோ
Paris Olympics 2024 Interesting Facts: பாரீஸ் நகரில் பிரம்மாண்ட ஒலிம்பிக் திருவிழா தொடங்க உள்ள நிலையில், ஒலிம்பிக் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை கீழே காணலாம்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக ரசிகர்களால் கொண்டாடப்படுவது ஒலிம்பிக். ஒலிம்பிக் திருவிழா வரும் 26ம் தேதி பாரீஸ் நகரில் தொடங்க உள்ளது. ஒலிம்பிக் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை கீழே காணலாம்.
எத்தனை நாடுகள் பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறது?
நடப்பு ஒலிம்பிக் தொடரில் மொத்தம் 206 நாடுகள் பங்கேற்கிறது.
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் மிகச் சிறிய நாடு எது?
ஆஸ்திரேலிய வடகிழக்கில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நௌரு நாடே ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் மிகச்சிறிய நாடு ஆகும். இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே சுமார் 12 ஆயிரத்து 100 மட்டுமே. 1996ம் ஆண்டு முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்த நாடு பளுதூக்குதல், ஜூடோ, தடகளத்திற்கு மட்டுமே வீரர்களை அனுப்புகிறது.
ஒலிம்பிக் பதக்கமே வெல்லாத மிகப்பெரிய நாடு எது?
கோடிக்கணக்கான மக்கள் தொகையை கொண்ட நாடாக ஆசிய கண்டத்தில் திகழும் வங்கதேசம் இதுவரை ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் கூட வென்றதில்லை. 1984ம் ஆண்டு முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வங்கதேசம் தடகளம், நீச்சல், துப்பாக்கிச்சுடுதல், ஜிம்னாஸ்டிக், கோல்ஃப் என பல போட்டிகளில் கடந்த 10 ஒலிம்பிக்கில் பங்கேற்றும் அவர்கள் ஒரு பதக்கம் வெல்லவில்லை.
ஒலிம்பிக் பதக்கமே வெல்லாத நாடுகள் எத்தனை?
ஒலிம்பிக் தொடரில் தொடர்ந்து பங்கேற்றும் இதுவரை பதக்கமே வெல்லாதவர்கள் பட்டியலில் 60 நாடுகள் உள்ளது. அதில் வங்கதேசம், பொலிவியா, கம்போடியா, ஹோண்டுராஸ், நேபாளம் மற்றும் ஏமன் நாடுகளும் அடங்கும்.
தங்கமே வெல்லாமல் அதிக ஒலிம்பிக்கில் பங்கேற்ற நாடு எது?
21 ஒலிம்பிக் தொடர்களில் பங்கேற்றுள்ள மொனாக்கோ ஒரு முறை கூட தங்கமே வென்றதில்லை. 1920ம் ஆண்டு முதல் ஒலிம்பிக்கில் மொனாக்கோ பங்கேற்று வருகின்றனர்.
குறைந்த ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள நாடு எது?
தெற்கு சூடான் மற்றும் கொசோவா நாடுகள் மிக குறைந்த ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றுள்ளன. இவர்கள் 2016 மற்றும் 2021 ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றுள்ளன. தென்சூடான் 2011ம் ஆண்டு தனி நாடாக மாறியது. கொசோவா 2008ம் ஆண்டு செர்பியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.
ஒலிம்பிக்கை அதிக முறை நடத்திய நாடு எது?
உலகின் மிகப்பெரிய நாடான பிரான்ஸ் தற்போது நடத்தும் ஒலிம்பிக்குடன் சேர்த்து 6வது முறையாக ஒலிம்பிக் தொடரை நடத்துகிறது. ஆனால், அதிக முறை ஒலிம்பிக் நடத்திய நாடு என்ற பெருமையை அமெரிக்கா தன்வசம் வைத்துள்ளது. அமெரிக்கா 8 முறை ஒலிம்பிக் தொடரை நடத்தியுள்ளது.