TVK Vijay Next Plan | OPERATION வட மாவட்டம்! தவெகவின் அடுத்த மாநாடு! விஜய்யின் ப்ளான் என்ன?
தவெகவின் முதல் பூத் கமிட்டி மாநாடு கோவையில் நடைபெற்ற நிலையில் அடுத்த மாநாட்டை வடக்கு மண்டலத்தில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கான இடம் கிட்டத்தட்ட தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, சீமான் உள்பட பல்வேறு கட்சிகளும் இப்போதே தேர்தல் பணிகளை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜயும் கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை வலுப்படுத்தி வருகிறார். அதன்படி, கட்சி ரீதியிலான 120 மாவட்டச் செயலாளர்களை நியமித்தது, 70,000 ஆயிரம் பூத் ஏஜண்டுகள் நியமனம், சார்பு அணி நிர்வாகிகள் நியமனம் மற்றும் அவர்களுக்கான பயிற்சி முகாம் என்று விஜய் கட்சி வேலைகளை தீவிரம் காட்டி வருகிறார்.
அண்மையில் கூட கோவையில் பூத் ஏஜண்டுகள் மாநாட்டை நடத்தினார் விஜய். இதனைத்தொடர்ந்து அடுத்த பூத் ஏஜண்ட் மாநாடு எங்கே நடைபெறும் என்ற கேள்வி எழுந்தது. தொடர்ந்து சென்னை, கோவை என்று தனது அரசியல் மாநாடுகளை நடத்தி வரும் விஜய் இந்த முறை தென்மண்டலங்களான மதுரை, ராமநாதபுரம் , திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் மாநாடு நடத்த வேண்டும் என்று அப்பகுதி தவெக நிர்வாகிகள் தொடர்ந்து விஜய்க்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் விஜய் அதற்கு இன்னும் ஒப்புதல் கொடுத்ததாக தெரியவில்லை.
இச்சூழலில் தான் தவெக-வின் அடுத்த மாநாட்டை வடக்கு மண்டலத்தில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கான இடம் கிட்டத்தட்ட தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, இரண்டாவது பூத் கமிட்டி மாநாட்டை வடக்கு மண்டலமான வேலூரில் நடத்த இடங்கள் பார்க்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலுரை தேர்வு செய்தற்கான பின்னணியில் விஜயின் ’வி’ சென்டிமெண்ட் இருப்பதாகவும் சொல்கின்றனர்.
விஜய் கோவைக்கு சென்ற போது எப்படி வரவேற்பு அளிக்கப்பட்டதோ அதேபோல் இந்த முறையும் வரவேற்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விஜயின் உத்தரவின் பேரில் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த தீவிரமாக செய்து வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல், வடக்கு மண்டலத்தில் பூம் கமிட்டி மாநாடு நடத்தி முடித்த பிறகே தென் மண்டலத்தில் மாநாடு நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் வேட்பாளர்கள் அறிமுக மாநாட்டை தேர்தல் சமயத்தில் மதுரையில் பிரமாண்டமாக நடத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக சொல்கின்றனர்.





















