Ryo Tatsuki Prediction: “ஜூலையில் பேரழிவு“ ஜப்பானின் புதிய பாபா வங்கா சொன்னது என்ன.? பீதியில் மக்கள்
ஜப்பானில் புதிய பாபா வங்கா என அழைக்கப்படும் ரயோ டாட்சுகி, வரும் ஜூலை மாதம் ஒரு பேரழி ஏற்படும் என கணித்துள்ளார். இதனால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். அந்த பேரழிவு எங்கு ஏற்படும் தெரியுமா.?

எதிர்காலத்தில் நடப்பவற்றை முன்கூட்டியே கணிப்பவர்களை தீர்க்கதரிசிகள் என்று கூறுவார்கள். அந்த வகையில், பல்கேரியாவைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளியான பாபா வங்கா மிகவும் பிரபலம். அவரது பல்வேறு கணிப்புகள் அப்படியே நடந்ததால், அவர் உலகப் புகழ் பெற்றார். இதபோல், ஜப்பானிலும் ஒரு தீர்க்கதரிசி இருக்கிறார். அவர் தான், ரயோ டாட்சுகி. இவர் ஜப்பானின் புதிய பாபா வங்கா என மக்களால் அழைக்கப்படுகிறார். இவரது கணிப்பு ஒன்று தற்போது மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.
யார் இந்த ரயோ டாட்சுகி.?
ஜப்பானியரான ரயோ டாட்சுகி, 1999-ம் ஆண்டு, தனது “The Future I Saw“ அதாவது “நான் கண்ட எதிர்காலம்“ என்ற புத்தகத்தை வெளியிட்டு, அதன் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தார். பல ஆண்டுகளாக அவர் கணித்த தீர்க்க தரிசனங்களின் தொகுப்பாக அந்த புத்தம் இருந்தது. இது ஆரம்பத்தில் சிறிதளவே கவனத்தை பெற்றாலும், அவரது பல கணிப்புகள் உண்மையானதையடுத்து, ஜப்பானையும் தாண்டி அவரது புகழ் பரவியது.
அந்த புத்தகத்தில், 2011-ம் ஆண்டில் நடைபெற இருந்த டோஹோகு பூகம்பம், அதைத் தொடர்ந்து ஏற்படும் பேரழிவுகளை பற்றி கணித்திருந்தார். அதன் பின்னர், அவர் குறிப்பிட்ட அந்த மாதத்தில், பூகம்பம் மற்றும் சுனாமி ஏற்பட்டு, 18,000-த்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
இதைவிட, அவர் கணித்ததுபோல், ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணு உலையில் கசிவு ஏற்பட, உலகமே அதிர்ச்சியில் உறைந்தது. இப்படி அவர் கணித்த பல விஷயங்கள் நடக்கத் தொடங்கியதால், மக்கள் அவரை நம்ப ஆரம்பித்தனர். அதோடு, சர்வதேச அளவில் அவரை ஜப்பானிய பாபா வங்கா என்றும், புதிய பாபா வங்கா என்றம் அழைக்கத் தொடங்கினர்.
2025-க்கு ரயோ டாட்சுகியின் கணிப்பால் மக்கள் பீதி
ரயோ டாட்சுகி அடுத்ததாக எழுதிய “நான் கண்ட எதிர்காலம்“ புத்தகம், 2021-ல் வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தில், 2025-ம் ஆண்டு ஜூலையில் நடக்க இருக்கும் ஒரு பேரழிவு குறித்து அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, ஜூலையில், ஜப்பானுக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையே, கடலுக்கடியில், ஒரு பெரிய விரிசல் உருவாக உள்ளதாகவும், அதன் காரணமாக இரு தட்டுகளில் உள்ள நாடுகளிலும் பேரழிவு ஏற்படும் எனவும் கணித்துள்ளார். இது, முன்னதாக 2011-ல் ஏற்பட்ட பேரழிவின்போது ஏற்பட்ட சுனாமி அலைகளைவிட, 3 மடங்கு உயர சுனாமி அலைகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடலுக்கடியில் எரிமலை வெடித்து இழப்புகளை மேலும் அதிகப்படுத்தும் என்றும், இந்த பேரழிவின் மையப்பகுதி, ஜப்பான், தைவான், இந்தோனேஷியா மற்றும் வடக்கு மரியானா தீவுகளை இணைக்கும் வைர வடிவப் பகுதியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
டாட்சுகியின் இந்த கணிப்பால், அந்த நேரத்தில் ஜப்பானுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்யத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, ஜப்பானில் உள்ள சீனர்கள் விழிப்புடன் இருக்குமாறு அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜப்பான் அரசு, விரிவான பேரிடர் மீட்புக்காக, உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி தயாராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அவரது இந்த கணிப்பு உண்மையாகும் பட்சத்தில், அதில் குறிப்பிடப்பட்ட நாடுகளுக்கு அருகே உள்ள சிங்கப்பூர், மலேசியா, இந்தியாவின் அந்தமான் தீவுப் பகுதிகள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.





















