MUMBAI OUT OF IPL : ஹைதராபாத் போராட்டம் வீண் : ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது நடப்பு சாம்பியன் மும்பை
MUMBAI WIN : ஐ.பி.எல். தொடரில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
அபுதாபியில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் மோதியது. 170 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்ற நெருக்கடியான சூழலில் மும்பை களமிறங்கியது. ஹைதராபாத் அணிக்கு மணீஷ் பாண்டே கேப்டன் பொறுப்பு வகித்தார்.
ஆட்டம் தொடங்கியது முதல் இஷான் கிஷான் அதிரடியை வெளிப்படுத்தினார். இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்து 4 பவுண்டரிகள் அடித்தார். இஷான்கிஷான் 16 பந்தில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த பந்தில் அரைசதம் அடித்த மும்பை வீரர் என்ற சாதனையை படைத்தார். 18 ரன்கள் எடுத்திருந்த ரோகித்சர்மா ரஷீத்கான் பந்தில் ஆட்டமிழந்தார்.
மும்பை 7.1 ஓவர்களில் 103 ரன்களை குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 10 ரன்களில் வெளியேறிய சிறிது நேரத்தில், அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த இஷான் கிஷான் 84 ரன்களில் உம்ரான் மாலிக் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்தவுடன் இளம் பந்துவீச்சாளர் அபிஷேக் சர்மா பந்தில் அடுத்தடுத்து பொல்லார்டும், ஜிம்மிநீஷமும் ஆட்டமிழந்ததால் ஹைதராபாத் நிம்மதி மூச்சுவிட்டார்.
ஆனால், மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் பந்துகளை பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் பறக்கவிட்டார். அவர் 24 பந்தில் 50 ரன்களை குவித்தார். கடைசியில் 40 பந்தில் 82 ரன்களை எடுத்து 9வது விக்கெட்டாக சூர்யகுமார் யாதவ் வெளியேறினார். ஹைதராபாத் அணிக்கு மும்பை 236 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து, 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மாவும், ஜேசன் ராயும் அதிரடி தொடக்கத்தை அளித்தனர். இருவரும் பவுண்டரிகளை மைதானத்தின் அனைத்து பக்கமும் பறக்கவிட்டனர். 5 ஓவர்களில் ஹைதராபாத் 60 ரன்களை எட்டியது. ஜேசன் ராய் 21 பந்தில் 34 ரன்களை எடுத்த நிலையில் ட்ரென்ட் போல்ட் பந்தில் அவுட்டானார். ஹைதராபாத்தை 65 ரன்களுக்குள் ஆட்டமிழக்க செய்யாத காரணத்தால் கொல்கத்தா அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் அபிஷேக் சர்மா 33 ரன்களில் ஆட்டமிழந்தார். முகமது நபி, அப்துல் சமத் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனாலும், 9 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 100 ரன்களை கடந்தது. மணீஷ் பாண்டேவுடன் இணைந்து பிரியம் கார்க் பார்ட்னர்ஷிப் அமைத்தார். மணீஷ் பாண்டேவிற்கு நன்றாக ஒத்துழைப்பு அளித்த பிரியம் கார்க் 21 பந்தில் 29 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து ஜேசன் ஹோல்டர், ரஷீத்கான், விருத்திமான் சஹா ஒற்றை இலக்கத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் தான் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள முதல் போட்டியிலே மணீஷ் பாண்டே கடைசி வரை களத்தில் நின்று மும்பையின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை குவித்தது. இருப்பினும் மும்பை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மணீஷ் பாண்டே 41 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 69 ரன்களுடன் களத்தில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணியில் பும்ரா, கூல்டர் நைல், நீஷம் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இரு அணிகளும் நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேறியுள்ளன. மும்பை 12 புள்ளிகளுடன் 6வது இடத்திலும், ஹைதராபாத் 6 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் புள்ளிப்பட்டியலில் உள்ளன.