Sellur Raju on DMK: போச்சு.! அடுத்த 10 வருஷத்துக்கு திமுக ஆட்சிக்கு வர முடியாது; செல்லூர் ராஜு சொன்ன மதுரை செண்ட்டிமென்ட்
திமுக அடுத்த 10 வருடங்களுக்கு ஆட்சிக்கு வர முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். ஒரு செண்ட்டிமென்டை வைத்து அவர் இப்படி கூறியுள்ளார். அது என்ன தெரியுமா.?

மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், திமுக தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்டதாகவும், அடுத்த 10 வருடங்களுக்கு அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். அவர் எதற்காக அப்படி கூறினார்.? அதன் பின்னால் உள்ள செண்ட்டிமென்ட் என்ன தெரியுமா.?
மதுரையில் நடந்த பொதுக்குழு - திமுக தலைவர் கூறியது என்ன.?
திமுக பொதுக்குழுக் கூட்டம் மதுரை உத்தங்குடி பகுதியில் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டார்கள். இதில் கலந்துகொண்ட தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மேடையில் பேசும்போது, வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மண்ணில் - தொன்மையான தமிழரின் பண்பாட்டை எடுத்துக்காட்டும் மதுரை மண்ணில், தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு தேவையான முடிவுகளை எடுக்கவும், தமிழ்நாட்டைச் சூழ்ந்து நிற்கும் பகையை எதிர்கொண்டு முறியடிக்க வியூகங்கள் அமைக்கவும், வெற்றியை நோக்கி உழைக்கவும், இந்தப் பொதுக்குழுவை கூட்டியிருக்கிறோம் என தெரிவித்தார்.
கழகத்துக்காக பலர் உழைத்த தியாக பூமியான மதுரை மண்ணில், கழகப் பொதுக்குழு நடப்பதை பெருமையாக கருதுகிறேன். கழகம் தொடங்கியதில் இருந்து, மதுரையில் 6 பொதுக்குழுக்கள் நடைபெற்றிருக்கிறது. இது ஏழாவது பொதுக்குழு. ஏழாவது முறை கழகம் ஆட்சியமைக்க அடிகோலும் பொதுக்குழுதான் இது. இது வழக்கமான பொதுக்குழு அல்ல, ஏழாவது முறையாக வாகை சூட வியூகம் வகுக்கும் பொதுக்குழு. அடுத்த ஆண்டு இந்த நேரத்தில் என்ன மாதிரி தலைப்புச் செய்தி வந்திருக்க வேண்டும் என்றால், “ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சி அமைத்தது. கழகக் கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது!”. “இரண்டாவது முறையாக திராவிட மாடல் ஆட்சி தொடர்கிறது!”. இதுதான் தலைப்புச் செய்தியாக இருக்க வேண்டும். அதுக்கான வியூகத்தை வகுக்கும் பொதுக்குழுதான் இது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
அடுத்த 10 வருஷத்துக்கு திமுக ஆட்சிக்கு வர முடியாது - செல்லூர் ராஜு
இந்த நிலையில், மதுரையில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது குறித்து, செய்தியாளர் சந்திப்பின்போது விமர்சித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமுக தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
மதுரையில் பொதுக்குழு நடத்தினால், ஒரு முறைக்கு மறுமுறை திமுக ஆட்சிக்கு வராத சுவாரஸ்யம் அந்த கட்சிக்கு இருப்பதாக செல்லூர் ராஜு கூறினார். கருணாநிதி இருந்தபோதும் வந்ததில்லை என கூறிய அவர், திமுகவில் எம்.ஜி.ஆர் இருந்தவரை அவ்வாறு ஆட்சிக்கு வந்ததாகவும், திமுகவை விட்டு எம்.ஜி.ஆர் வெளியேறிய பிறகு தொடர்ந்து 2-வது முறையாக திமுக ஆட்சிக்கே வந்தது கிடையாது என அவர் தெரிவித்தார்.
அதோடு முக்கியமாக, மதுரையில் திமுக பொதுக்குழு எப்போதெல்லாம் கூடுகிறதோ, அப்போதெல்லாம், அடுத்த 10 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிக்கு வர முடியாது என செல்லூர் ராஜு கூறினார். 1977-ல் நடந்த பொதுக்குழுவுக்கு பிறகு, 12 ஆண்டுகள் அதிமுக ஆட்சி தான் வந்தது என்றும், திமுகவிற்கு வனவாசம் தான் என்றும் விமர்சித்தார்.
அதன் காரணமாகவே, திமுக தலைமைக்கு மதுரை என்றாலே பிடிக்காது என்றும், யாரோ சொல்லி முதல்வரை ஏமாற்றி இருக்கிறார்கள் எனவும் அவர் கூறினார். மாற்றுத்திறனாளி ஒருவர் உலகக் கோப்பை வாங்கியதாக மாவட்ட ஆட்சியர் முதல் முதலமைச்சர் வரை ஏமாற்றியது போல், பொதுக்குழு கூட்டத்தை மதுரையில் நடத்தி, முதலமைச்சரை ஏமாற்றி இருக்கிறார்கள் என கூறினார்.





















