Poonamallee-Paranthur Metro: பூந்தமல்லி சுற்றுவட்டார மக்களுக்கு குதூகலமான செய்தி; வருது பரந்தூர் மெட்ரோ - முழு விவரம்
பூந்தமல்லி - பரந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் குறித்த முழு விவரங்களை காணலாம்.

பூந்தமல்லியிலிருந்து பரந்தூர் வரையிலான 52.94 கிலோ மீட்டர் தூர மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மெட்ரோ ரயில் திட்டம் குறித்த முழு விவரங்களை தற்போது காணலாம்.
மக்கள் விரும்பும் மெட்ரோ
சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்து மார்க்கமாக மெட்ரோ ரயில் மாறியுள்ளது. மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட புதிதில், விலை கூடுதலாக இருப்பதால் மக்கள் இதை அதிகம் பயன்படுத்துவாரகளா என் சந்தேகம் இருந்தது.
ஆனால், போகப் போக, அதன் வசதி தெரிந்த நிலையில், மக்கள் அதை அதிகம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். செல்லும் இடங்களுக்கு விரைவாக செல்வது, வெயிலுக்கு இதமாக குளிர்சாதன வசதி, மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பார்க்கிங் வசதி போன்றவற்றால், மக்களின் ப்ரியமான போக்குவரத்தாக மெட்ரோ ரயில் மாறிவிட்டது என்றே கூறலாம்.
அதற்கு ஏற்றார்போல், பல்வேறு வழித்தடங்களில் அடுத்தடுத்து மெட்ரோ திட்டங்களை தமிழ்நாடு அரசு விரைவாக செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே, கிண்டியிலிருந்து பூந்தமல்லி வரையிலான மெட்ரோ திட்டம் முடிவுறும் நிலையை நெருங்குவதால், அதற்கு அடுத்ததாக, பூந்தமல்லியிலிருந்து, பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இரு கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ள மெட்ரோ திட்டம்
பூந்தமல்லியிலிருந்து திருமழிசை, ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை, மக்கள் பயன்பாட்டிற்கான துரித போக்குவரத்து அமைப்பை பரிந்துரை செய்வதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை, தமிழ்நாடு அரசிடம் கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது.
பரந்தூரில் முன்மொழியப்பட்டுள்ள புதிய விமான நிலையம், திருமழிசையில் முன்மொழியப்பட்டுள்ள பேருந்து நிலையம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, பூந்தமல்லியில் இருந்து திருமழிசை, ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை 52.94 கிலோ மீட்டர் தூர மெட்ரோ ரயில் திட்டத்தை இரு கட்டங்களாக செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த வழித்தடத்தில், மொத்தம் 19 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்களை கொண்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. அதில், முதற்கட்டமாக 8,779 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பூந்தமல்லியிலிருந்து சுங்குவார்சத்திரம் வரை 27.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ உயர் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.





















