Sunil Chhetri:"ஆல் ஏரியாவுலையும் அண்ணன் தான் மாஸ்" - ஐஎஸ்எல் வரலாற்றில் சுனில் சேத்ரி புதிய சாதனை!
Sunil Chhetri: இந்தியன் சூப்பர் லீக்கில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் சுனில் சேத்ரி.
இந்தியன் சூப்பர் லீக்கில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் சுனில் சேத்ரி.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து:
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (செப்டம்பர் 28) 17வது ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. அந்தவகையில் இந்த போட்டியில் பெங்களூரு எஃப்சி மற்றும் மோகன் பாகன் சூப்பர் ஜெயன்ட் அணிகளும் விளையாடின.விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில், பெங்களூரு அணிக்காக எட்கா் மெண்டெஸ் 9-ஆவது நிமிடத்திலும், சுரேஷ் சிங் வாங்ஜம் 20-ஆவது நிமிடத்திலும், சுனில் சேத்ரி 51-ஆவது நிமிடத்தில் பெனால்ட்டி கிக் வாய்ப்பிலும் கோலடித்தனா்.
சுனில் சேத்ரி சாதனை:
அந்தவகையில் இந்த போட்டியில் பெங்களூரு எஃப்சி அணி வீரர் சுனில் சேத்ரி கோல் அடித்ததன் மூலம் இந்தியன் சூப்பர் லீக் வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அதாவது ஐஎஸ்எல் வரலாற்றில் 64 வது கோலை பதிவு செய்ததன் மூலம் தான் சுனில் சேத்ரி இந்த வராலாற்று சாதனையை செய்திருக்கிறார். இதற்கு முன்னதாக பார்தோலோமிவ் ஓக்பெச்சே தான் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். இப்படிப்பட சூழலில் தான் அவரது சாதனையை சுனில் சேத்ரி முறியடித்துள்ளார்.
151 சர்வதேச போட்டி:
இந்திய கால்பந்து அணிக்காக 151 சர்வதேச போட்டிகளில் சுனில் சேத்ரி விளையாடி இருக்கிறார். இதில், 94 கோல்களை அடித்திருக்கும் இவர் அண்மையில் இந்திய கால்பந்து அணியில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார். இச்சூழலில் தான் ஐஎஸ்எல் போட்டியில் பெங்களூரு எஃப்சி அணியின் முக்கிய வீரராக களம் இறங்கி விளையாடி வருகிறார்.
அந்த வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு பெங்களூரு எஃப்சி அணியில் சுனில் சேத்ரி விளையாடினார். பின்னர்,மும்பை சிட்டி எஃப்சி அணியில் சேர்ந்தார். 2015-16 சீசனின் போது, மீண்டும் பெங்களூரு எஃப்சி இல் இணைந்தார். அதில் இருந்த அந்த அணிக்காகத்தான் ஐஎஸ்எல் போட்டிகளில் விளையாடி வருகிறார். 158 ஐஎஸ்எல் போட்டிகளில் 64 கோல்களை அடித்துள்ளார். தனது ஐஎஸ்எல் வாழ்க்கையில் 12 முறை கோல் அடிக்க உதவி செய்துள்ளார், இது அவரது மொத்த கோல் பங்களிப்பு 76 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.