மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்
மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் திடீரென பதவியை ராஜினாமா செய்து ஷாக் கொடுத்துள்ளார். இதற்கு பின்னணியில் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் யூ டர்ன் அடித்ததே காரணம் என்றும், அமைச்சர் அமித்ஷாவுடன் 2 மணி நேரமாக முக்கிய மீட்டிங் ஒன்று நடந்ததாகவும் கூறப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு மே 3ம் தேதி மணிப்பூரில் மெய்தேய் சமூகத்திற்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே நடந்த வன்முறை ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. வன்முறையை கட்டுப்படுத்த தவறிய முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வந்தனர். மணிப்பூர் பிரச்னை பிரேன் சிங்குக்கு தலைவலியாக மாறியது.
இந்தநிலையில் பிரேன் சிங் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளார். அப்போது பாஜக மற்றும் கூட்டணி கட்சியான நாகா மக்கள் முன்னணி கட்சியினரும் உடன் இருந்தனர். மணிப்பூரில் பாஜக எம்.எல்.ஏக்கள் பிரேன் சிங்குக்கு எதிராக திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளால் மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், பிரேன் சிங்கின் தலைமை மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததையே இந்த பிரச்னைக்கான காரணமாக சொல்கின்றனர்.
அதேபோல் கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளமும் மணிப்பூரில் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. 2022 சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 6 MLAக்கள் வெற்றி பெற்றனர். சில மாதங்களில் அதில் 5 பேர் பாஜகவுக்கு தாவிய நிலையில், அப்துல் நசிர் மட்டுமே ஐக்கிய ஜனதா தளம் சார்பில் MLA-வாக இருந்தார். அந்த ஒரே ஒரு MLA-வும் பாஜகவுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கினார்.
நாளை மணிப்பூர் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் MLA-க்களே பாஜகவுக்கு எதிராக யூ டர்ன் அடிக்கப் போவதாக தலைமைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலைமையை வைத்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக காய்களை நகர்த்தி வருகிறது காங்கிரஸ். இதையெல்லாம் உன்னிப்பாக கவனித்த டெல்லி தலைமையும் முக்கிய புள்ளிகளை மணிப்பூருக்கு அனுப்பி பேச்சுவார்த்தை நடத்த சொல்லியுள்ளனர். அவர்களும் மணிப்பூரில் நிலவரம் சரியில்லை என்ற மெசேஜை தலைமையின் காதுகளுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அதனால் உடனடியாக மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா பிரேன் சிங்கை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சுமார் 2 மணி நேரமாக இந்த பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகே பிரேன் சிங் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கூட்டத்தொடரில் ஆளும் பாஜகவுக்கு சிக்கலை கொடுக்கக் கூடிய விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளதால், அதற்கு முன்பாகவே முதலமைச்சர் பதவியில் இருந்து பிரேன் சிங்கை நீக்கிவிட்டு அதிருப்தி MLA-க்களை மீண்டும் தங்கள் பக்கம் கொண்டு வருவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்கள் அடுத்த முதலமைச்சர் யார் என்ற அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.





















