”பாஜக ரொம்ப கொடூரம்” கடும் கோபத்தில் ஸ்டாலின்! அண்ணாமலை ரியாக்ஷன்
தேசியக் கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை நிராகரித்ததற்காக மத்திய அரசு அச்சுறுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்டாக் செய்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் இருந்து உடனடி ரியாக்ஷன் வந்துள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 2152 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், ‘தமிழ்நாட்டிற்கு எதிரான தமிழக அரசின் அணுகுமுறை எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை நிராகரித்ததற்காக வெளிப்படையாக மிரட்டல் விடுத்து, தமிழக மாணவர்களுக்கான ரூ.2,152 கோடியைப் பறித்து, இப்போது பிற மாநிலங்களுக்கு வழங்கியுள்ளனர். தங்களின் உரிமைகளுக்காக நின்ற மாணவர்களை தண்டிக்கும் செயலே தவிர வேறு எதுவும் இல்லை. அரசியல் பழிவாங்கலுக்காக கல்வி வாய்ப்பை நெரிக்கும் அளவுக்கு இந்திய வரலாற்றில் எந்த மத்திய அரசும் கொடூரமாக இருந்தது இல்லை. தமிழகம் மற்றும் அதன் மக்கள் மீது அநீதி மற்றும் வெறுப்பின் முகமாக பாஜக தன்னை மீண்டும் நிரூபணம் செய்துள்ளது” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடனடியாக பதில் கொடுத்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், ‘தமிழகம் தனது பெருமையைத் தொலைத்து, எண் கணிதத்திலும், தாய்மொழி அறிவிலும் (தமிழ்) கடைசி இடத்தில் உள்ளது. கல்வியை அரசியலாக்கி, கல்வியின் தரத்தை குறைத்து, தமிழகக் குழந்தைகளுக்கு, சமமான வாய்ப்புகளையும், உலகத்தரம் வாய்ந்த கல்வியையும் கிடைக்காமல் செய்ததற்காக, திரு ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியினர் வெட்கப்பட வேண்டும். இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்தே PMSHRI உட்பட சமக்ர சிக்ஷாவின் அனைத்து அம்சங்களையும் செயல்படுத்துவதாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு உறுதியளித்தது. இந்த உறுதிமொழியை நீங்கள் நிறைவேற்றினீர்களா இல்லையா, திரு ஸ்டாலின் அவர்களே? செயல்படுத்தப்படாத ஒரு திட்டத்திற்கு, மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? சமக்ர சிக்ஷாவின் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட நிதி அறிக்கையின்படி, 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், 35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இன்னும் 2024-25 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு நிதி விடுவிக்கப்படவில்லை. அப்படி இருக்கையில், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யைப் பரப்ப உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என கூறியுள்ளார்.





















