ADMK EPS Discussion: செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்காதது பெரும் சர்ச்சையையும், கேள்விகளையும் எழுப்பியுள்ள நிலையில், முக்கிய நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டதால் பரபரப்பு.

கோவையில், அத்திகடவு-அவிநாசி பாராட்டு விழாவை அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் புறக்கணித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகளோடு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை மேற்கொண்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்ததால் சர்ச்சை
ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகளின் கனவுத்திட்டமான அத்திகடவு-அவிநாசி திட்டத்தை, சமீபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆனால், இந்த திட்டம் செயல்படுவதற்கான முக்கிய காரணமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும், அதைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இருந்துள்ளனர். இதனால், இந்த திட்டத்திற்கு உரிமை கொண்டாடும் வகையில், அதை செயல்படுத்தியதற்காக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, கோவை அன்னூரில் நேற்று பாராட்டு விழா நடந்தது.
இந்த விழாவில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அதேபோல், விழாவில் பேசிய தலைவர்களும், செங்கோட்டையனின் பெயரை குறிப்பிடவில்லை. இதனால், பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், கட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புறக்கணிக்கவில்லை என விளக்கமளித்த செங்கோட்டையன்
இந்த சூழ்நிலையில், விழாவில் பங்கேற்காதது குறித்து விளக்கமளித்த செங்கோட்டையன், தான் விழாவை புறக்கணிக்கவில்லை என்றும், விழா அழைப்பிதழ், விழா மேடை மற்றும் விளம்பர பலகையில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இடம்பெறாததால், அந்த வருத்தத்தில் விழாவில் பங்கேற்கவில்லை என விளக்கமளித்தார். மேலும், இது உணர்வுகளின் வெளிப்பாடுதான் எனவும் தெரிவித்துள்ளார்.
முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி
இன்று காலை முதலே செங்கேட்டையன் பிரச்னை செய்திகளை ஆக்கிரமித்ததால், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டார். அதில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில், செங்கோட்டையன் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பின், அதில் பங்கேற் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அத்திகடவு-அவிநாசி பாராட்டு விழாவை அதிமுக ஏற்பாடு செய்யவில்லை என்றும், விவசாயிகள் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது என்றும் கூறினார். மேலும், விவசாய கூட்டமைப்பு நிகச்சி என்தால், அரசியல் கலப்பு இருக்கக் கூடாது என கருதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை அவர்கள் வைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆனால், இருதரப்பின் விளக்கங்களும் சப்பைக்கட்டுதான் என்பது, அரசியல் அறிந்தோருக்கு நன்றாகவே தெரியும். அதனால், அதிமுகவில் இதன் பிறகு என்ன நடக்கப்போகிறது என்பதை அனைவரும் உற்று நோக்கியுள்ளனர். அடுத்த வருடம் தேர்தல் வேறு வருவதால், அதற்குள் கட்சி பிளவுபட்டால், அது அதிமுகவிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும். இத்தகைய சூழலால் தற்போது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

