SA vs WI: ”யார் ஏரியலா யார் சீன போட்றது”.. மே.தீவுகளை ஓடவிட்டு அடித்து வரலாற்று வெற்றி பெற்ற தென்னாப்ரிக்கா
சர்வதேச டி-20 போட்டிகளில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்த அணி என்ற சாதனையை மேற்கிந்திதிய தீவுகள் அணிக்கு எதிராக தென்னாப்ரிக்கா அணி படைத்துள்ளது.
சர்வதேச டி-20 போட்டிகளில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்த அணி என்ற சாதனையை மேற்கிந்திதிய தீவுகள் அணிக்கு எதிராக தென்னாப்ரிக்கா அணி படைத்துள்ளது. அதன்படி, 258 ரன்கள் என்ற இலக்கை 18.5 ஓவரில் சேஸ் செய்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஜான்சன் சார்லஸ் 118 ரன்களையும், தென்னாப்ரிக்கா அணி சார்பில் டி-காக் 100 ரன்களையும் சேர்த்தனர்.
மேற்கிந்திய தீவுகள் - தென்னாப்ரிக்கா மோதல்:
தென்னப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. 1-0 என மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலை வகித்து வரும் நிலையில், இரண்டாவது டி-20 போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஜான்சன் ருத்ரதாண்டவம்:
மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு ரன்களை சேர்ப்பதற்குள் ஒரு விக்கெட்டை இழந்த நிலையில், ஜான்சன் சார்லஸ் களமிறங்கினார். ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய அவர், தென்னாப்ரிக்காவின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இதன் மூலம் 46 பந்துகளில் 118 ரன்களை விளாசினார். இதில் 11 சிக்சர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் அடங்கும். குறிப்பாக தனது முதல் சர்வதேச டி-20 சதத்தை வெறும் 39 பந்துகளில் ஜான்சன் சார்லஸ் பூர்த்தி செய்தார்.இதன் மூலம் குறைந்த பந்துகளில் சதமடித்த மேற்கிந்திய தீவுகள் வீரர் என்ற கெயிலின் சாதனையை ஜான்சன் தகர்த்தார்.அவருக்கு பக்கமலமாக கைல் மேயர்ஸ் 51 ரன்களையும், இறுதிகட்டத்தில் அதிரடி காட்டிய ஷெபார்ட் 18 பந்துகளில் 41 ரன்களையும் விளாசினர். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி, 5 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்களை சேர்த்தது.
சுழன்றடித்த டி காக் - ஹென்றிக்ஸ்:
கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்ரிக்கா அணி அரம்பம் முதலே அபாரமான ஆட்டத்ட்தை வெளிப்படுத்தியது. டிகாக் - ஹென்றிக்ஸ் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 152 ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய டி காக் 44 பந்துகளில் 100 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இதில் 8 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் அடங்கும். அவரை தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஹென்றிக்ஸ் 28 பந்துகளில் 68 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் மார்க்ரம் மற்றும் கிளாசன் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 18.5 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என தென்னாப்ரிக்கா அணி சமன் செய்துள்ளது.
வரலாற்று சாதனை:
2589 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக எட்டியதன் மூலம், டி-20 போட்டிகளில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக எட்டிய அணி என்ற சாதனையை தென்னாப்ரிக்கா அணி பெற்றுள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு செர்பியா அணிக்கு எதிரான போட்டியில் பல்கேரியா 243 ரன்களை சேஸ் செய்தது தான், டி-20 போட்டிகளில் அதிகபட்ச சேஸிங் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.