ஏமாந்து போன இளம்பெண்.. WFH வேலை வாங்கி தருவதாக 15 லட்சம் அபேஸ்.. மோசடி கும்பலின் பலே டெக்னிக்
அதிக சம்பளத்துடன் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி மகாராஷ்டிரா பெண்ணிடம் கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாயை ஏமாற்றியுள்ளது ஆன்லைன் மோசடி கும்பல்.

நல்ல சம்பளத்துடன் வொர்க் ஃப்ரம் ஹோம் வேலை வாங்கி தருவதாகக் கூறி மகாராஷ்டிராவை சேர்ந்த இளம்பெண்ணை சிலர் ஏமாற்றியுள்ளனர். அதிக சம்பளத்துடன் வேலை என ஆசை காட்டி பெண்ணிடம் கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாயை ஏமாற்றியுள்ளது அந்த கும்பல்.
ஆன்லைன் மோசடி கும்பல்:
சமீப காலமாக, ஆன்லைன் மோசடி அதிகரித்து வருகிறது. செயலி மூலம் குறைந்த பணம் கட்டினால் தினமும் அதிக பணத்தை ஈட்டலாம் என தினந்தோறும் மோசடிகள் நடந்து வருகிறது. தங்களின் பெயரில் துறைமுகத்திற்கு போதைப்பொருள் வந்திருப்பதாகவும் இதனால் டிஜிட்டல் கைது செய்வதாக மர்ம நபர்களிடம் இருந்து அழைப்புகள் வருவது வாடிக்கையாகிவிட்டது.
காவல்துறையிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் தங்களுக்கு பணம் தர வேண்டும் என மர்ம நபர்கள் அடங்கிய கும்பல் மிரட்டி பல கோடி ரூபாய் ஏமாற்றியுள்ளனர். அப்படிப்பட்ட சம்பவம்தான், மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது.
தானே மாவட்டத்தை சேர்ந்த 37 வயது பெண், மோசடி கும்பலிடம் 15.14 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். நல்ல சம்பளத்துடன் வொர்க் ஃப்ரம் ஹோம் வேலை வாங்கி தருவதாகக் கூறி அவரை ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "டோம்பிவ்லி நகரைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ஒரு மோசடி கும்பல், கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஜூலை வரை தொடர்பு கொண்டுள்ளனர்.
ரூ 15 லட்சம் அபேஸ்
டெலிகிராம் செயலி மூலம் ஆன்லைனில் சில டாஸ்க் கொடுத்துள்ளனர். இதனை முடித்தால் நல்ல சம்பளத்துடன் வொர்க் ஃப்ரம் ஹோம் வேலை கிடைக்கும் என அவர்கள் கூறியுள்ளனர். பின்னர், குறிப்பிட்ட காலத்திற்கு, அவரிடமிருந்து ரூ. 15,14,460 ஏமாற்றியுள்ளனர்.
கும்பலிடம் அளித்த தொகையோ அல்லது வாக்குறுதியளிக்கப்பட்ட வருமானமோ திரும்பக் கிடைக்காத சூழலில், அவர்கள் மீது போலீசில் புகார் அளித்தார். நேற்று, மன்பாடா போலீசார் தொடர்புடைய சட்ட விதிகளின் கீழ் மூன்று குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை" என்றார்.
இதேபோன்று குறைந்தது ஐந்து பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றும் இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

